நாடு திரும்பிய இந்தியர்களுக்கு அமெரிக்கா அவமானம்
![நாடு திரும்பிய இந்தியர்களுக்கு அமெரிக்கா அவமானம்](ptmin/uploads/news/India_rathna_India-US-Immigrant-Deportation.jpg)
7 மாசி 2025 வெள்ளி 02:49 | பார்வைகள் : 1052
அமெரிக்கா நாடு கடத்திய இந்தியர்களை கைகளில் விலங்கிட்டு, கால்களில் சங்கிலி மாட்டி ராணுவ விமானத்தில் கொண்டுவந்து இறக்கிய நிகழ்வு, நாடெங்கும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'இது அமெரிக்காவின் அப்பட்டமான மனித உரிமை மீறல்' என கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர், பார்லிமென்டின் இரு சபைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் முறையான விசா இல்லாமல் வசித்து வரும் வெளிநாட்டினரை நாடு கடத்தும் பணியில், அதிபர் டிரம்ப் அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. பல நாடுகளில் இருந்து வந்தவர்களை கொத்து கொத்தாக திருப்பி அனுப்புகிறது.
அமெரிக்காவில் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக அரசு தகவல் சேகரித்துள்ளது. அவர்களும் படிப்படியாக திருப்பி அனுப்பப்படுவர். அதன் துவக்கப்புள்ளியாக, டெக்சாசில் இருந்து 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானத்தில் கொண்டுவரப்பட்டனர்.
நாள் முழுவதும் நீடித்த நீண்ட பயணத்தில் அவர்கள் கைகளில் விலங்கும், கால்களில் சங்கிலியும் மாட்டி உட்கார வைக்கப்பட்டனர். நகர முடியாமல் இருக்கையுடன் சங்கிலியால் பிணைத்துஇருந்தனர்.
இந்த காட்சிகளை அமெரிக்க அரசு வீடியோ எடுத்து உலகெங்கும் பார்க்கும் வகையில் பரப்புகிறது. 'எங்கள் நாட்டுக்குள் திருட்டுத் தனமாக நுழைந்தால் இப்படித்தான் திருப்பி அனுப்புவோம்' என்று அதில் அமெரிக்க எல்லை ராணுவம் எச்சரிக்கிறது.
இந்த அடாவடி செயலுக்கு, எதிர்க்கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவித்தன. பார்லிமென்டின் இரு சபைகளிலும் விவகாரம் எதிரொலித்தது. ராஜ்யசபாவில் காரசாரமான விவாதம் நடந்தது.
ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, காங்கிரஸ்: திரும்பி வரும் இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? இன்னும் எத்தனை பேர் இப்படி திருப்பி அனுப்பப்படுவர்?
சாகேத் கோகலே, திரிணமுல் காங்கிரஸ்: உலகின், ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு இந்தியா என்று பெருமை பேசும் அரசு, இந்தியர்களை அழைத்து வர விமானம் அனுப்பாதது ஏன்? நாட்டில் விமானங்களுக்கா பஞ்சம்?
சிவா, தி.மு.க.,: இந்தியர்களை திருப்பி அனுப்ப போகிறோம் என இந்திய துாதரகத்திடம் அமெரிக்க அரசு எப்போதோ கூறிவிட்டது.
அப்படி இருந்தும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது ஏன்? 14 மணி நேரம் கைவிலங்கு, கால் சங்கிலியுடன் பயணம் செய்வது எவ்வளவு பெரிய இழிவு? இது நமக்கு அவமானம் இல்லையா?
சஞ்சய்சிங், ஆம்ஆத்மி: கை விலங்கிடுவது, சங்கிலியால் கட்டுவது எல்லாம் மனித தன்மையற்ற செயல். அத்தனை பேருக்கும் அந்த விமானத்தில் ஒரே ஒரு கழிப்பறை தான் இருந்துள்ளது. சிறு நாடுகள் கூட விமானம் அனுப்பி அழைத்து வரும்போது நாம் ஏன் அனுப்பவில்லை?
இவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இரு சபைகளும் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டன. முன்னதாக, இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டதை கண்டித்து பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திரும்பியவர்களின் கண்ணீர் கதைகள்
நாடு திருப்பியவர்கள் வீடுகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் ஏஜெண்டுகளிடம் 50 லட்சம் ரூபாய் வரை கொடுத்து அமெரிக்கா சென்றுள்ளனர். பணத்தை வாங்கிக் கொண்டு, வெவ்வேறு நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக அவர்களை ஏஜென்டுகள் அனுப்பி வைத்துள்ளனர். பஞ்சாபின் ஜஸ்பால் சிங் கூறுகையில், ''ஏஜென்டுக்கு 30 லட்சம் ரூபாய் கொடுத்தேன். முதலில் பிரேசில் அழைத்துச் சென்று ஆறு மாதம் தங்க வைத்தனர். ஜன., 24ல் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது கைதானோம். ராணுவ விமானத்தில் கை விலங்கு, காலில் சங்கிலி போட்டு ஏற்றியதும் வேறொரு காவல் முகாமுக்கு அழைத்துச் செல்வதாக நினைத்தோம். பின்னர் தான் இந்தியாவுக்கு அனுப்புவதை அறிந்தோம். அமிர்தசரஸ் வரும் வரை கை விலங்கு, கால் சங்கிலி அகற்றப்படவில்லை,'' என்றார்.ஹர்விந்தர் சிங், ''முறையான விசாவில் அழைத்துச் செல்வதாக கூறியதால் ஏஜென்டுக்கு 42 லட்சம் ரூபாய் கொடுத்தேன். கடைசி நேரத்தில் விசா கிடைக்கவில்லை என கூறி, கத்தார் வழியாக பிரேசில் அழைத்துச் சென்றனர். பெருவுக்கு விமானத்தில் அழைத்து செல்வதாக கூறி விட்டு, டாக்சியில் கொலம்பியா அழைத்துச் சென்று, அங்கிருந்து பனாமா வழியாக மலைப்பாதையில் மெக்சிகோ அழைத்துச் சென்றனர். சிறிய படகில் நான்கு மணி நேரம் பயணம் செய்தோம். 18 மலைகளை கடந்திருப்போம். பனாமா காட்டுப்பகுதியில் ஒருவர் இறந்தார். கடலில் மூழ்கி ஒருவர் இறந்தார்,'' என்றார். சுக்பால் சிங் என்பவர், ''கடல் வழியாக 15 மணி நேர பயணம், மலை, காடு வழியாக 45 கி.மீ., துாரம் நடை பயணம் என வேதனையை அனுபவித்து தான் அமெரிக்கா சென்றோம். முடியாதவர்களை அங்கங்கே விட்டு போய்விடுவார்கள். வழி நெடுகிலும் பிணங்களை பார்த்தேன்,'' என்றார்.
வழக்கமான நடைமுறை தான்: மத்திய அரசு சமாளிப்பு
எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு ராஜ்யசபாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்து கூறியதாவது:பிற நாடுகளுக்கு சட்ட விரோத வழிகளில் செல்வதை மத்திய அரசு ஒருபோதும் ஏற்காது. அவ்வாறு சென்றவர்கள் மோசமான வாழ்க்கைக்கு தள்ளப்படுகின்றனர். உயிரிழக்கவும் நேர்கிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்புவதோ, திருப்பி அழைத்துக் கொள்வதோ புதிதல்ல. 2009ல் இருந்தே, பிற நாட்டவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பி வருகிறது. அவர்களுக்கு சில விதிமுறைகள் உள்ளன.
நாடு கடத்தும்போது, அவர்கள் நாட்டு ராணுவ விமானங்களை தான் பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு விதி. கைவிலங்கிடுவது உட்பட கட்டுப்பாடுகள் விதிப்பதும் அப்படித்தான். பெண்கள், குழந்தைகளுக்கு அவ்வாறு செய்வதில்லை. ராணுவ விமானம் என்றில்லை, பயணியர் விமானத்தில் அழைத்து வந்தாலும் இதுதான் நடைமுறை. எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், நாடு திரும்புவோரை விமானத்தில் இழிவுபடுத்த வேண்டாம் என அமெரிக்க அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாடு திரும்பியுள்ளோரிடம் விசாரணை நடத்தி, அவர்களை அனுப்பி வைத்த ஏஜென்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
கடந்த, 2009லிருந்து தற்போது வரை, 15,658 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நம் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விமானத்துக்கு மணிக்கு ரூ.24.95 லட்சம் பயணியர் விமானத்தை விட ராணுவ விமானத்தில் வசதிகள் குறைவு. ஆனால் பயண செலவு பல மடங்கு அதிகம். அமெரிக்காவில் இருந்து தென் அமெரிக்க நாடான கவுதமாலாவுக்கு திருப்பி அனுப்பிய நபர்களுக்கு, தலா 4.09 லட்சம் ரூபாய் பயண செலவு என அமெரிக்கா சொன்னது. ஒரு மணி நேரம் விமானம் பறக்க ஆன செலவு 25 லட்சம் என்று கூறியது. அதோடு ஒப்பிட்டால், இந்தியாவுக்கான பயணம் 14 மணி நேரத்துக்கு மேல் என்பதால், பல மடங்கு அதிகமாக கணக்கிடப்படும். அந்த விமானம் திரும்பி செல்லும் செலவும் நம் தலையில் தான்.
புதிய சட்டம் குறித்து ஆலோசனை'
புலம் பெயர்வோர் பாதுகாப்பு, நலனுக்கான குடியேற்ற சட்டம்' கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் தலைமையிலான வெளியுறவுத் துறைக்கான பார்லி., கமிட்டி இது தொடர்பான பரிந்துரை அளித்தது. அதில், 1983ம் ஆண்டு குடியேற்ற சட்டத்தில் திருத்தங்கள் செய்வது அவசியம் என்றும், வெளிநாடு வேலை குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து வெளியுறவு அமைச்சகம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது, சென்னை உட்பட 14 நகரங்களில் 'புலம் பெயர்வோருக்கான பாதுகாவலர் அலுவலகங்கள்' இருப்பதை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவு படுத்தவும், பஞ்சாப், உ.பி., போன்ற அதிக அளவில் புலம் பெயர்வோர் உள்ள மாநிலங்களில் கூடுதல் அலுவலகங்கள் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
![](/images/engadapodiyalxy.jpg)