விமான நிலையம் அமைக்க பரந்துார் தேர்வானது எப்படி? மத்திய அரசு விளக்கம்
![விமான நிலையம் அமைக்க பரந்துார் தேர்வானது எப்படி? மத்திய அரசு விளக்கம்](ptmin/uploads/news/India_rathna_muralidhar.jpg)
9 மாசி 2025 ஞாயிறு 03:26 | பார்வைகள் : 364
விமான நிலையம் கட்டுவதற்கு பரந்துார் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்பதற்கான காரணங்களை, பார்லிமென்டில் முதன்முறையாக மத்திய அரசு விரிவாக விளக்கிக் கூறியுள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி நடந்து வருகிறது.
இதில், பரந்துார் விமான நிலையம் தொடர்பாக தமிழக எம்.பி.,க்கள் கேட்ட கேள்விகளுக்கு, விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹல் விரிவாக பதில் அளித்தார்.
அரக்கோணம் தொகுதி தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், 'விமான போக்குவரத்து நிபுணர்கள், அவை சார்ந்த நிறுவனங்கள் ஆகிய தரப்புகளிடமிருந்து பரந்துார் விமான நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு ஏதேனும் தகவல் கிடைத்துள்ளதா; அவற்றில் பாதுகாப்பு அபாயங்கள் ஏதேனும் தெரிவிக்கப்பட்டுள்ளனவா?' என, கேட்டார்.
ஒப்புதல்
இதற்கு, அமைச்சர் முரளிதர் மொஹல் அளித்துள்ள பதில்:
விமான நிலையம் கட்டும் விஷயத்தில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், ராணுவ அமைச்சகம், இந்திய விமான நிலைய அதிகார ஆணையம் ஆகியவற்றின் கருத்துகளும், பரிந்துரைகளும் முக்கியமானவை.
இந்த மூன்று தரப்பும் என்ன கருத்துகள், பரிந்துரைகளை தெரிவித்துள்ளன என்பது குறித்து இடத்தேர்வுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாகவே, இந்த திட்டத்தை நிறைவேற்றும் மாநில அரசு மற்றும் கட்டுமான நிறுவனத்திடம், மத்திய அரசு கேட்டு பெற்றது.
அதில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அளித்திருந்த கருத்துகள் முக்கியமானவை. அதாவது, 'அந்த இடமானது சமச்சீராக, சமதளத்தில் அமைந்ததாக இல்லை.
உள்புறம் முழுதும் ஒரே மாதிரி இல்லாமல், அவ்வப்போது உருமாறி ஏராளமான மேடு பள்ளங்கள் மற்றும் கூம்பு வடிவிலான தரைதள பரப்புகள் இருக்கின்றன. எனவே, அவற்றை எல்லாம் நீக்கி சரிசெய்து தரப்பட வேண்டும்.
விதிகளின்படி, இத்திட்டத்திற்கான ஏரோடிராம் எனப்படும் விமானங்கள் நிற்குமிடங்கள், ஓடுதளப் பாதை ஆகியவற்றுக்கான லைசென்ஸ் பெறப்படுவதற்கு முன்பாக இந்த பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்.
அங்குள்ள நீர்நிலைகளை பொறுத்தவரை, வனவிலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் வாழ்விடங்களை உறுதி செய்திடவும், அவற்றுக்கு ஏற்படும் இடையூறுகளை தணிக்கும் வகையிலான மாற்றுத்திட்டங்களும் இருந்தாக வேண்டும்.
விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்குதல், வெள்ளம் ஏற்படுதல் போன்ற பிரச்னைகளை தவிர்க்க சரியான திட்டம் இருந்தாக வேண்டும்' என்றும், விமான போக்குவரத்து இயக்குநரகம் கருத்துகளை தெரிவித்து இருந்தது.
இந்த அனைத்து பிரச்னைகளையும், லைசென்ஸ் விண்ணப்பிப்பதற்கு முன் சரிசெய்து தருவதாகவும், விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ள அனைத்துக்கும் தாங்கள் கட்டுப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.
வழிகாட்டுதல் குழு
மேலும், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்து விமான நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி, அதை உறுதி செய்வதற்காக உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து, பல்வேறு அமைச்சகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அதன்பிறகே, பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கான இடத்தேர்வுக்கு ஒப்புதலை அளித்தது.
இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.
மாநில அரசே பொறுப்பு
லோக்சபாவில் தென்சென்னை தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், “பரந்துாரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அளிக்கக்கூடிய உதவிகள் என்ன? மண் பரிசோதனை போன்ற பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு, மாநில அரசுக்கு உதவுமா?” என, கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு, மத்திய விமான போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் மொஹல் அளித்த பதில்:நாடு முழுதும் கிரீன்பீல்டு விமான நிலையங்கள் அமைக்க முடிவெடுத்து, அதற்காக ஒரு வரையறை தயாரிக்கப்பட்டது. அதில், 'நிலம் கையகப்படுத்துதல், திட்டத்திற்கு தேவையான நிதி முதலீடு மற்றும் கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான அனைத்து விஷயங்களுமே, மாநில அரசையும், கட்டுமான நிறுவனத்தையும் சார்ந்தது' என்று, தெளிவாக கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் எந்த உதவியும் அளிக்கப்பட மாட்டாது. அதுவே, பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கும் பொருந்தும்.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
![](/images/engadapodiyalxy.jpg)