முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை

18 பங்குனி 2025 செவ்வாய் 14:46 | பார்வைகள் : 314
முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட அண்ணாமலை வந்து பார்க்கட்டும்; என்ன நடக்கும் என்பதை, அப்புறம் பார்க்கலாம்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
அவர் அளித்த பேட்டி: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாற்றுக்கட்சி நடத்தும் மாநிலங்களை பழிவாங்க மாட்டோம்' என, பா.ஜ.,வினர் கூறினர். ஆனால், பா.ஜ., ஆளாத மாநிலங்களில் பழிவாங்கும் நோக்கத்துடன், அமலாக்கத் துறை சோதனை நடக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக, மாற்றுக்கட்சிகளின் ஆட்சிக்கு தொல்லை தந்து வருகிறது மத்திய அரசு. அமலாக்கத் துறையை கேடயமாக, பா.ஜ., பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத் துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை ஏவி, பா.ஜ., அரசு பழிவாங்குகிறது.
யோக்கியர்கள் அல்ல
அமலாக்கத் துறை அச்சுறுத்தலால், பா.ஜ.,வில் சேருவோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. மாற்றுக்கட்சியில் இருந்தபோது, அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு ஆளானவர்கள், பா.ஜ.,வில் சேர்ந்ததும் வழக்கு முடிக்கப்படுகிறது. ஊழல் செய்தவர்கள் பா.ஜ.,வில் இணைந்ததும் புனிதர்களாகி விடுகின்றனர்.
அமலாக்கத் துறையில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல. அமலாக்கத் துறை அதிகாரிகளே லஞ்சம் வாங்கி கைதாகின்றனர்; அவர்கள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல. தமிழகத்தின் நலன்களுக்கு மத்திய அரசு நிதி தர மறுக்கிறது. அதற்காக, பா.ஜ.,வினர் போராட முன்வரவில்லை.
டில்லி பாணி அரசியல்
மஹாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், 3,000 கோடி ரூபாய் நிதியை, பா.ஜ., அரசு தர மறுக்கிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், 2,152 கோடி ரூபாயை விடுவிக்காமல், மத்திய அரசு மறுத்து வருகிறது.
தமிழகத்திலும், டில்லி பாணியில் அரசியல் செய்யலாம் என, பா.ஜ., கனவு காண்கிறது. அது ஒருபோதும் நிறைவேறாது. அனுமதியின்றி போராட போகிறவர்களை, முன்னெச்சரிக்கையாக கைது செய்வது தவறு இல்லை.
முதல்வர் வீட்டை முற்றுகையிட அண்ணாமலை வந்து பார்க்கட்டும்; என்ன நடக்கும் என்பதை, அப்புறம் பார்க்கலாம். 'டாஸ்மாக்'கில் 1,000 கோடி ரூபாய் ஊழலுக்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? எந்த தவறுக்கும் முதல்வர் இடம் கொடுக்க மாட்டார். யார் மீது என்ன குற்றச்சாட்டும் வேண்டுமானாலும் கூறலாம்; அது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.