செங்கோட்டைன் - வேலுமணி திடீர் ஆலோசனை; இ.பி.எஸ்., உடன் மோதலுக்கு முற்றுப்புள்ளி?

19 பங்குனி 2025 புதன் 20:44 | பார்வைகள் : 1115
சட்டசபையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணியுடன் நேற்று, செங்கோட்டையன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
முதல்வராக இருந்தபோது, அத்திக்கடவு -- அவினாசி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியதற்காக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, பிப்ரவரி 9ல் கோவை அன்னுாரில் பாராட்டு விழா நடந்தது.
நேருக்கு நேர்
இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இல்லை எனக்கூறி, அவ்விழாவை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். அன்றிலிருந்து பழனிசாமியை, நேருக்கு நேர் சந்திப்பதை, அவர் தவிர்த்து வருகிறார். இருவரையும் சமாதானப்படுத்த முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, வேலுமணி முயற்சி மேற்கொண்டனர்.
அதன் பலனாக சட்டசபையில், பழனிசாமியிடம் செங்கோட்டையன் நேற்று முன்தினம் பேசினார். அதைத் தொடர்ந்து, நேற்று சட்டசபைக்கு வந்த செங்கோட்டையன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பின், சட்டசபை லாபியில், வேலுமணி, முனுசாமியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
சமாதானம்
அதுபோல சட்டசபையில், பழனிசாமி, வேலுமணிக்கு நெருக்கமான கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் உடனும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
இது பற்றி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரிடம் பேசியபோது, 'செங்கோட்டையன் அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல்வாதி. கட்சியை மீறி எதையும், எப்போதும் செய்ய மாட்டார்.
'தான் மாவட்டச் செயலராக இருக்கும் மாவட்டத்தில் உள்ள கட்சியினர் சிலருக்கு மாநில அளவில் பொறுப்புகள் வழங்குவதற்கு முன், பழனிசாமி தன்னிடம் கலந்தாலோசிக்கவில்லை என, செங்கோட்டையன் வருத்தத்தில் இருந்தார்.
'அந்த வருத்தமே, பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை செயல்பட வைத்தது. வேலுமணி, முனுசாமி போன்றவர்கள் தலையிட்டு, பழனிசாமி தரப்பினை எடுத்துச் சொன்ன பின், செங்கோட்டையன் சமாதானம் அடைந்துள்ளார். ''இனி இருவருக்கும் பிரச்னைகள் எதுவும் இருக்காது. இருவரும் இணைந்தே செயல்படுவர்' என்றனர்.