ஐபிஎல் போட்டியில் நடுவராக உள்ள விராட் கோலியின் முன்னாள் அணி வீரர்

19 பங்குனி 2025 புதன் 12:12 | பார்வைகள் : 398
விராட் கோலியின் முன்னாள் அணி வீரர் இந்த ஐபிஎல் போட்டியில் நடுவராக அறிமுகமாக உள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18வது ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்த 2025 ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் முன்னாள் சக வீரர் தன்மய் ஸ்ரீவஸ்தவா (Tanmay Srivastava) நடுவராக பங்கேற்க உள்ளார்.
2008 ஐசிசி U19 உலக கோப்பை தொடரில், விராட் கோலி தலைமையிலான U19 இந்திய அணி கோப்பையை வென்றது.
அந்த அணியில் இருந்த விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, மனிஷ் பாண்டே மட்டுமே தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர்.
இந்த U19 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா சார்பில் அதிக ரன் அடித்த வீரராக ஸ்ரீவஸ்தவா இருந்தார்.
அதன் பின்னர் 2008 ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணி சார்பில் ஸ்ரீவஸ்தவா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அதில் அவர் பெரிதாக கவனம் பெறவில்லை.
அதன் பின்னர், உத்தரகாண்ட் அணியின் அணித்தலைவராக இருக்கும் போது, 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஆனாலும் கிரிக்கெட்டில் தனது பங்களிப்பை செலுத்த விரும்பிய அவர், நடுவருக்கான 2வது நிலை தேர்வுக்கு படித்து தேர்ச்சி பெற்று நடுவராக மாறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நடுவருக்கு படிப்பது கடினமான ஒன்று. இதற்காக இரவு விழித்திருந்து படித்தேன். கிரிக்கெட்டின் விதிமுறைகள் அதன் தாக்கங்களை புரிந்து கொள்ள நிறைய படிக்க வேண்டும்" என கூறினார்.
ஐபிஎல் தொடரில் விளையாட்டு வீரராக விளையாடி விட்டு, நடுவராக மாறியுள்ள ஒரே வீரர் என்ற பெருமையை தன்மய் ஸ்ரீவஸ்தவா பெற்றுள்ளார்.