Le Comte de Monte-Cristo - வரலாற்றில் இருந்து ஒரு நாவல்!
7 சித்திரை 2017 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18561
உண்மை சம்பவங்களின் கலவை இல்லாமல் எந்த ஒரு படைப்பும் உருவாகுவதில்லை.. அது சினிமாவாக இருந்தாலும் சரி... நாவலாக இருந்தாலும் சரி..! இன்றைய பிரெஞ்சு புதினத்தில், வரலாற்று சம்பவங்களுடன் இணைத்து ஒரு நாவல் எழுதப்பட்டு... சக்கை போடு போட்டு... மொழிபெயர்க்கப்பட்டு, திரைப்படமாக்கப்பட்டு.... வாங்க பார்க்கலாம்!!
முன்னர் ஒரு தடவை பிரெஞ்சு புதினத்தில் 'மூன்று துப்பாக்கிவீரர்கள்!' எனும் தலைப்பில் ஒரு நாவல் குறித்து எழுதியிருந்தோம்... அந்த நாவலை எழுதிய Alexandre Dumas, பேய்கதை எழுத்தாளர் Auguste Maquet உடன் இணைந்த எழுதிய Le Comte de Monte-Cristo நாவல் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.
கதை பிரான்ஸ் - இத்தாலிக்கு இடையில் இடம்பெறுகிறது. கதைப்படி கதையின் நாயகன் தன் திருமணத்திற்கு முதல் நாள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். சிறை என்றால் எங்கே... நான்கு பக்கமும் கடல் சூழ்ந்துள்ள தீவு ஒன்றில் சிறைவைக்கப்படுகிறான். சிறைச்சாலை தரும் கொடுமைகளை தாங்காமல் எப்படி சிறையில் இருந்து தப்பிக்கிறான் என்பது தான் பிரதான கதை.
1844 ஆண்டு தொடக்கம் 1845 வரையான காலப்பகுதியில் இந்த நாவல் தொடராக வெளிவந்தது. இந்த நாவல் அன்பு, நேர்மை, துரோகம், காதல் என பல்வேறு உணர்வுகளை கொண்ட அட்டகாசமான நாவலாக உருவாகி, பலத்த வரவேற்பை சந்தித்தது. கதையில் வரும் ஒவ்வொரு மாந்தர்களும் ஒவ்வொரு குண இயல்புடன், அவர்களுக்குரிய நியாய தர்மங்களுடன் நடந்துகொள்ளும் போது எழும் சிக்கல்களை மிக நேர்த்தியாக சொல்லியிருப்பார் எழுத்தாளர் Alexandre Dumas.
எழுத்தாளர் Jacques Peuchet எழுதிய The Count of Monte Cristo நாவலில் ஒரு காவல்துறை அதிகாரி, எப்போதும் பழிவாங்கும் எண்ணத்திலேயே இருப்பார்... அந்த கதாப்பாத்திரத்தின் பாதிப்பிலேயே இந்த நாவலை எழுதியதாக Alexandre Dumas தெரிவித்திருந்தார். இந்த நாவல் 18 பாகங்களாக Journal des Débats இதழில் வெளியானது. பின்னர் 1844 ஆம் ஆண்டு இந்த நாவல் புத்தகமாக வெளியானது. முதல் 16 பாகங்களிலும் Christo" எனும் பெயருக்கு பதிலாக "Cristo" என தவறுதலாக அச்சடிக்கப்பட்டதாக ஒரு வரலாறு உள்ளது. (தற்போது கிடைக்கும் புத்தகங்களில் சரியாக அச்சடிக்கப்பட்டுள்ளது)
பின்னர் அது, ஆங்கிலத்தில் The Count of Monte Cristo எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது... அப்படியே பெல்ஜியம், இத்தாலி, என ஐரோப்பாவை தாண்டி... கண்டங்கள் கடந்தன. இதென்ன ஆச்சரியம் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பிரெஞ்சு நாவல் இதுவாகும். "Shigai Shiden Gankutsu-ou" என்பது அதன் பெயர்.
இப்போது நீங்கள் படிக்கப்போவது தான் ஆச்சரியம். இந்த வார ஆரம்பத்தில் Château d'If தீவில் உள்ள சிறைச்சாலை குறித்து எழுதியிருந்தோமே... அதே தான். அங்குதான் இந்த கதை இடம்பெறுகிறது. உண்மையான சிறைச்சாலையை பின்னணியில் வைத்துக்கொண்டு கற்பனையாக கதை உருவாக்கியுள்ளார் எழுத்தாளர்.
தமிழில் 'சிறைச்சாலை' என ஒரு திரைப்படம் வெளியானது நினைவிருக்கலாம். அந்த படத்தின் கதை கூட இந்த நாவலில் இருந்து 'இன்ஸ்ஃபையர்' ஆனதுதான். இன்று இந்த நாவல் பல இலட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்ததோடு, 'க்ளாஸிக்' பட்டியலிலும் சேர்ந்துள்ளது.