ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை பா.ம.க.,வுக்கு அமைச்சர்கள் பதில்

21 பங்குனி 2025 வெள்ளி 16:18 | பார்வைகள் : 781
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளதாக, அமைச்சர்கள் தெரிவித்தனர்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ம.க., -- ஜி.கே.மணி: ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதுதான் சமூக நீதியின் அடித்தளம். ஜாதி ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மதம், ஜாதியின் பெயரில்தான் நம் நாடு கட்டமைக்கப்பட்டுள்ளது. எல்லோரும் படித்தால், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றால் ஜாதி ஒழியும். அதுவரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தொகுப்பு முறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அமைச்சர் மெய்யநாதன்: ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை, மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என, பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜாதிவாரி கணக்கடுப்பு நடத்தாமல், மத்திய அரசுதான் காலம் தாழ்த்துகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, கூட்டணி கட்சியான பா.ஜ.,வை, பா.ம.க., வலியுறுத்த வேண்டும்.
பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: ஒரு மாநிலத்தில் உள்ள ஜாதி, வேறு மாநிலத்தில் வேறு பிரிவில் வரும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில், எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து முடிவெடுத்தால், நன்றாக இருக்கும்.
த.வா.க., - வேல்முருகன்: ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் நடத்தக் கூடாது என, மத்திய அரசு தடை விதிக்கவில்லை. உச்ச நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. எனவே, தெலுங்கானா அரசு போல, தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
* காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை: தெலுங்கானா, கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும்போது, அதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. தெலுங்கானாவில் எடுக்கப்பட்டது ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அல்ல; ஜாதிவாரி சர்வே.
அமைச்சர் சிவசங்கர்: மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. அதற்கென மத்தியில் தனி துறையே உள்ளது. அவர்களை செய்ய வேண்டியதை, மாநிலங்களிடம் தள்ளிவிட்டு கைகழுவ பார்க்கின்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது.