இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இப்படி ஒரு ஆசையா?

21 பங்குனி 2025 வெள்ளி 08:45 | பார்வைகள் : 407
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில், அமீர்கானுடன் 'கஜினி' மற்றும் சல்மான் கானுடன் வரவிருக்கும் 'சிக்கந்தர்' படத்தில் பணியாற்றிய முருகதாஸ், தான் அடுத்ததாக பாலிவுட்டில் உள்ள மூன்றாவது கானுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசினார். மேலும் சிக்கந்தர் படம் பற்றியும் அவர் பேசி உள்ளார்.
அவர் கூறியதாவது : "சிக்கந்தர் படத்திற்குப் பிறகு, நான் ஒரு தமிழ் படத்தை முடிக்க வேண்டும். பிறகு நான் ஷாருக் உடன் இணைந்து பணியாற்றுவது பற்றி யோசிப்பேன். நிச்சயமாக, அது என் விருப்பப் பட்டியலில் உள்ளது; நான் அவருடன் பணியாற்ற விரும்புகிறேன்," என்று முருகதாஸ் கூறினார். அமீர் மற்றும் சல்மானைத் தவிர, முருகதாஸ் ரஜினிகாந்த் ('தர்பார்'), விஜய் ('கத்தி'), மகேஷ் பாபு ('ஸ்பைடர்'), சிரஞ்சீவி ('ஸ்டாலின்'), சூர்யா (கஜினி) மற்றும் அஜித் ('தீனா') போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார்.
பெரிய நட்சத்திரங்களுடன் நீங்கள் இணையும்போது உங்கள் பொறுப்புகள் இரட்டிப்பாகுமா என்று கேட்டதற்கு, முருகதாஸ், "நாங்கள் பெரிய நட்சத்திரங்களுடன் ஒரு படம் செய்யும்போது, எங்களுக்கு உடனடி கவனம் கிடைக்கும். அது ஒரு பிளஸ் பாயிண்ட். அழுத்தமும் இருக்கிறது. பார்வையாளர்கள் எங்களிடமிருந்து வித்தியாசமான விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் ரசிகர்களை நாங்கள் ஏமாற்ற முடியாது. அதனால் அந்த அழுத்தம் எப்போதும் இருக்கும். பெரிய நட்சத்திரங்களுடன், அவர்களின் அறிமுகம், மாஸ் பில்ட்-அப் மற்றும் மாஸ் ஆடியன்ஸ் உட்பட பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்." என்று கூறினார்.
முருகதாஸ் 'கஜினி' மற்றும் 'கத்தி' போன்ற வெற்றிகளுடன் பெரிய நட்சத்திரங்களுடன் வலுவான சாதனையை வைத்துள்ளார். இப்போது சல்மான் கான் நடித்த 'சிக்கந்தர்' பாக்ஸ் ஆபிஸில் எப்படி செயல்படப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். சஜித் நடியவாலாவின் தயாரிப்பில், இப்படம் மார்ச் 30ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அவர் பாலிவுட்டில் இசையமைக்கும் முதல் படம் இதுவாகும்.