Paristamil Navigation Paristamil advert login

டில்லி நீதிபதி வீட்டில் பணம் எடுக்கப்பட்டதா? : காலையில் பரபரப்பு - மாலை மறுப்பு

டில்லி நீதிபதி வீட்டில் பணம் எடுக்கப்பட்டதா? : காலையில் பரபரப்பு - மாலை மறுப்பு

22 பங்குனி 2025 சனி 06:07 | பார்வைகள் : 1737


டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கணக்கில் வராத பணக்குவியல்கள் கட்டுக்கட்டாக கண்டெடுக்கப்பட்டதாக நேற்று காலை தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், 'அப்படி எதுவும் பணம் கைப்பற்றப்படவில்லை' என, டில்லி தீயணைப்பு படை தலைவர் நேற்று இரவு திடீரென மறுப்பு தெரிவித்தார்.

டில்லி உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா, 56. இவர், டில்லி துக்ளக் சாலையில், நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில், கடந்த 14ம் தேதி இரவு 11:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை.

அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்களும், டில்லி போலீசும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அப்போது அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில், கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணக்குவியல்களை போலீசார் கண்டெடுத்ததாக தகவல் வெளியானது.

அதில், கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் இருந்ததாகவும், சில கோடி ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு அதை அனுப்பி வைத்தது.

இதை தொடர்ந்து உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் துறை ரீதியிலான விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும், அவர் ஏற்கனவே பணியில் இருந்த அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கே அவரை பணியிட மாற்றம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்தனர். டில்லி உயர் நீதிமன்றமும் இது குறித்து, தன் கவலையை தெரிவித்தது.

இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா விசாரிப்பதற்காக பட்டியலிடப்பட்ட வழக்குகள் டில்லி உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதி வர்மா விடுப்பில் இருப்பதாகவும், வழக்குகளை வேறு அமர்வில் பட்டியலிடும்படியும் அவரது கோர்ட் மாஸ்டர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலீஜியம், விரிவான முதற்கட்ட விசாரணையை துவக்கியுள்ளது.

இந்த விவகாரம், நாடு முழுதும் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டில்லி தீயணைப்பு துறை தலைவர் அதுல் கர்க் நேற்று மாலை திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடந்த, 14ம் தேதி இரவு, 11:35 மணிக்கு எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு இரவு, 11:43 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வீட்டில், ஸ்டேஷனரி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நிரம்பிய, 'ஸ்டோர் ரூம்' ஒன்றில் தீ எரிந்து கொண்டிருந்தது.

வீரர்கள், 15 நிமிடங்களில் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டதும் விபத்து குறித்து டில்லி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தங்கள் கடமை முடிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டு வந்துவிட்டனர். தீயை அணைக்கும் பணியின் போது, நீதிபதியின் வீட்டில் தீயணைப்பு வீரர்களால் பணம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

காலையில், கட்டுக்கட்டாக பணக்குவியல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி, அடுத்தடுத்த நடவடிக்கைகள் வேகம் பெற்ற நிலையில், மாலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என தீயணைப்பு அதிகாரி தெரிவித்து இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்யசபாவில் விவாதம்

இந்த விவகாரம் ராஜ்யசபாவில் நேற்று எதிரொலித்தது. காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், நீதித்துறையின் பொறுப்பை அதிகரிக்க அரசுக்கு தேவையான வழிகாட்டுதல்களை சபை தலைவர் வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.இதை தொடர்ந்து ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியதாவது:சம்பவம் நடந்தவுடன் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வராமல், ஒரு வாரத்துக்கு பின் வெளிவந்தது கவலை அளிக்கிறது. இதுவே அரசியல்வாதிகள், அதிகாரிகள் அல்லது தொழிலதிபராக இருந்திருந்தால் சம்பந்தப்பட்டவர் உடனடி இலக்காக மாறியிருப்பார்.இதுகுறித்த வெளிப்படையான, முறையான, பொறுப்புள்ள பதில் நிச்சயம் வரும் என நான் நம்புகிறேன்.இந்த விவகாரம் குறித்து சபையில் விவாதிப்பது தொடர்பாக சபை தலைவர், எதிர்க்கட்சி தலைவருடன் கலந்தாலோசித்து விவாதம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


யார் இந்த யஷ்வந்த் வர்மா?

உத்தர பிரதேசத்தின் அலகாபாதில், 1969 ஜன., 6ல் பிறந்தவர் யஷ்வந்த் வர்மா. டில்லி ஹன்ஸ்ராஜ் கல்லுாரியில் பி.காம்., முடித்தவர், மத்திய பிரதேசத்தின் ரேவா பல்கலையில் எல்எல்.பி., முடித்தார்.அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், 1992 ஆக., 8ல் வழக்கறிஞராக பதிவு பெற்றார். அதன்பின், 2014 அக்., 13ல் அலகாபாத் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்; 2016, பிப்., 1ல் நிரந்தர நீதிபதியானார். அதன்பின், 2021 அக்., 11ல் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


இது என்ன குப்பை தொட்டியா?

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்துள்ள கொலீஜியம் முடிவுக்கு, அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தின் விபரம்:ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நீதிபதியை இங்கு பணியிட மாற்றம் செய்துள்ள கொலீஜியத்தின் முடிவால், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை குப்பைத் தொட்டியாக எண்ணுகிறீர்களோ என்ற கேள்வி எழுகிறது.இங்கு, நீதிபதிகள் பற்றாக்குறையால் வழக்குகள் விசாரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக குவிந்து கிடப்பது உண்மை தான். அதே நேரம், வழக்கறிஞர்களுக்கு பதவி உயர்வு அளித்து நீதிபதிகளாக நியமிக்கும் போது, சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுப்பது கவலை அளிக்கிறது. தகுதிகள் முறையாக பரிசீலிக்கப்படுவதில்லை. இதில் உள்ள குறைபாடு, ஊழலுக்கு வழிவகுக்கிறது. அதன் விளைவாக நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ராஜ்யசபாவில் விவாதம்

இந்த விவகாரம் ராஜ்யசபாவில் நேற்று எதிரொலித்தது. காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், நீதித்துறையின் பொறுப்பை அதிகரிக்க அரசுக்கு தேவையான வழிகாட்டுதல்களை சபை தலைவர் வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.இதை தொடர்ந்து ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியதாவது:சம்பவம் நடந்தவுடன் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வராமல், ஒரு வாரத்துக்கு பின் வெளிவந்தது கவலை அளிக்கிறது. இதுவே அரசியல்வாதிகள், அதிகாரிகள் அல்லது தொழிலதிபராக இருந்திருந்தால் சம்பந்தப்பட்டவர் உடனடி இலக்காக மாறியிருப்பார்.இதுகுறித்த வெளிப்படையான, முறையான, பொறுப்புள்ள பதில் நிச்சயம் வரும் என நான் நம்புகிறேன்.இந்த விவகாரம் குறித்து சபையில் விவாதிப்பது தொடர்பாக சபை தலைவர், எதிர்க்கட்சி தலைவருடன் கலந்தாலோசித்து விவாதம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


பணிநீக்கமே சரியான நடவடிக்கை!


பொதுவாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகள், குற்றச்சாட்டுகளில் சிக்கும்போது, அவர்களை பணிநீக்கம் செய்யும் அதிகாரம் என்பது, பார்லிமென்டிற்கு தான் உள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நீதிபதிகளுக்கு எதிராக, பார்லிமென்டில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அது நிறைவேற்றப்பட வேண்டும்.இல்லையெனில், குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நீதிபதிகளுக்கு எதிராக, பார்லிமென்ட் தாமே இவ்விவகாரத்தை கையில் எடுக்கலாம் அல்லது மூன்று பேர் இடம் பெறும் விசாரணை குழுவை, உச்ச நீதிமன்றம் அமைக்கும். அந்த குழு அறிக்கையை, உச்ச நீதிமன்றம் பார்லிமென்ட்டுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும். இதுதான் நடைமுறை.

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் என்பது பெரிய குற்றம். சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நடவடிக்கை தேவை. பணியிட மாற்றம் நடவடிக்கை என்பது போதாது; அது, ஏற்புடையதல்ல. உச்ச நீதிமன்றமே, அந்த நீதிபதிக்கு எதிராக பணிநீக்க நடவடிக்கையை முன்னெடுக்கும் என, நான் மட்டுமல்ல, அனைவரும் எதிர்பார்க்கின்றனர். நீதிபதி ஒருவர் வீட்டில், கணக்கில் வராத பணக்குவியல் எப்படி வருகிறது? எனவே, அவர் மீதான பணிநீக்க நடவடிக்கை என்பதே சரியாக இருக்கும். அவர் மீதான விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டும் வரை, பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்தில், அவருக்கு நீதிமன்ற பணி எதையும் ஒதுக்கீடு செய்யக்கூடாது.

- டி.ஹரிபரந்தாமன்,ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

தவறான தகவல் பரப்பப்படுகிறது: சுப்ரீம் கோர்ட்


இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் குறித்து தவறான தகவல்களும், வதந்திகளும் பரப்பப்படுகின்றன. அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இன்னும் மாற்றப்படவில்லை. அது பரிசீலனையில் உள்ளது. பணியிட மாற்ற முடிவுக்கும், நடந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை. இந்த விவகாரம் குறித்த கொலீஜியம் நேற்று முன்தினம் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாகவே, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துவிட்டார். அந்த அறிக்கையை ஆய்வு செய்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்