3 மாநில முதல்வர்கள் சென்னை வருகை; தி.மு.க., கூட்டத்தில் இன்று பங்கேற்பு

22 பங்குனி 2025 சனி 09:39 | பார்வைகள் : 245
தொகுதி மறு வரையறை தொடர்பாக தி.மு.க., இன்று சென்னையில் நடத்தும் கூட்டு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்வர்கள் வந்துள்ளனர்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தி.மு.க., கூறி வருகிறது. தன் கருத்தை வலியுறுத்தும் நோக்கில், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.
இதற்கென கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தை இன்று சென்னையில் கூட்டியுள்ளது. மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு பங்கேற்க அழைப்பு விடப்பட்டது. அதன்படி இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கேரளா முதல்வர் பினராய் விஜயன் முதல் தலைவராக நேற்று காலை சென்னை வந்து விட்டார்.
அவரைத் தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் வந்தார். மூன்றாவதாக தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று இரவு வந்து சேர்ந்தார். கர்நாடகா மாநில துணை முதல்வர் சிவக்குமார் இன்று காலை சென்னை வருவதாக தெரிவித்துள்ளார்.
இவர்களைத் தவிர, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.
ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் அமர் பட்நாயக் மற்றும் சஞ்சய் குமார் தாஸ் பர்மா, பாரதிய ராஷ்டிரிய சமீதி கட்சித் தலைவர் ராமராவ் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தனர்.
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நடத்தும் ஜனா சேனா கட்சி, இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம், ஒட்டுமொத்த டில்லி அரசியல்வாதிகளின் கவனத்தையும் சென்னையை நோக்கி தி.மு.க., திருப்பி உள்ளது.இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது