Paristamil Navigation Paristamil advert login

எங்களுக்கு கட்சி பேதம் கிடையாது: அமைச்சர் நேரு

எங்களுக்கு கட்சி பேதம் கிடையாது: அமைச்சர் நேரு

24 பங்குனி 2025 திங்கள் 05:59 | பார்வைகள் : 1318


எங்களுக்கு கட்சி பேதம் எல்லாம் கிடையாது; எல்லா சேர்மன்களும் எங்க ஆளுங்க தான்,” என அமைச்சர் நேரு தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில், 3.17 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் மற்றும் 11 புதிய பஸ் சேவையை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.

வளர்ச்சி திட்டம்

அமைச்சர்களை, பா.ம.க.,வைச் சேர்ந்த பேரூராட்சி சேர்மன் ஸ்டாலின் வரவேற்றார். விழாவில், அமைச்சர் நேரு பேசியதாவது:

தமிழகத்தில், 491 பேரூராட்சிகள், 138 நகராட்சிகள் இருந்தன. தற்போது, 147 நகராட்சிகள் உள்ளன. 15 மாநகராட்சிகள் இருந்தன; அது, தற்போது 25 ஆக உயர்ந்துள்ளன. இவை வாயிலாக நிறைவேற்றப்படும் வளர்ச்சி திட்டங்களுக்காக ஆண்டுதோறும், 26,000 கோடி ரூபாய் முதல்வரால் வழங்கப்படுகிறது.

மேலும், குடிநீருக்காக 100க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளுக்கு, தலா 20 கோடி என கடந்தாண்டு, மொத்தம் உள்ள 491 பேரூராட்சிகளுக்கும், 3,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டும், நிதி வழங்க உள்ளோம்.

பா.ம.க.,வைச் சேர்ந்த ஆடுதுறை பேரூராட்சி சேர்மனாக உள்ள ஸ்டாலின் வைக்கும் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றக் கூடியவையாக உள்ளன. எங்களுக்கு கட்சி பேதம் இருந்தால், இங்கு வந்து இந்த சேவைகளை செய்ய முடியாது.

நிதி ஒதுக்கீடு


தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி தலைவர்களும், எனக்கும், கட்சிக்கும் வேண்டப்பட்டவர்கள் தான். அதனால், எல்லா பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்