டில்லியில் இ.பி.எஸ்.,: பதற்றத்தில் தி.மு.க.,

26 பங்குனி 2025 புதன் 06:31 | பார்வைகள் : 1363
தமிழகத்தில், சட்டசபை கூட்டம் நடக்கும் நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திடீர் பயணமாக நேற்று டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரு கட்சிகளுக்கும் இடையே ஓராண்டுக்கு பின் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, தி.மு.க.,வுக்கு எதிராக புது வியூகம் வகுக்கப்படும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த, 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த அ.தி.மு.க., 2023 செப்டம்பரில் கூட்டணியை முறித்தது. அதன்பின், 'பா.ஜ.,வுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை' என, பழனிசாமி கூறி வந்தார்.
கடந்த, 4ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்துாரில் பேட்டி அளித்த பழனிசாமி, 'அ.தி.மு.க.,வின் ஒரே எதிரி தி.மு.க., தான். மற்ற எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது. வரும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்துவதே எங்கள் குறிக்கோள்' என்றார்.
இந்நிலையில், நேற்று பகல், 11:30 மணி அளவில், 'ஏர் இந்தியா' விமானத்தில், பழனிசாமி டில்லி சென்றார். சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில், அவர் டில்லி சென்றதால், அவரது பயணம் நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது.
மும்மொழிக் கொள்கைக்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ''எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, டில்லி சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. அங்கு அவர் யாரை சந்திக்க போகிறார் என்ற தகவலும் வந்துள்ளது. அப்படி சந்திக்கும்போது, தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை வலியுறுத்த வேண்டும்,'' என்றார்.
இதனால், பழனிசாமியின் டில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
டில்லியில் அவரிடம் செய்தியாளர்கள், 'நீங்கள் முக்கிய நபரை சந்திக்க டில்லி வந்துள்ளதாகக் கூறப்படுகிறதே' என்று கேட்டற்கு, ''நான் எதற்காக டில்லிக்கு வந்துள்ளேன் என்பதே தெரியாமல் கேள்வி கேட்கிறீர்கள்.
''முக்கிய நபர் யாரையும் சந்திக்க, நான் டில்லி வரவில்லை. எங்கள் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போது, வர முடியவில்லை. அதை பார்வையிடுவதற்காகவே டில்லி வந்துள்ளேன்,'' என்றார்.
பின், அங்கிருந்து நேராக, டில்லியில் சாகேத் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அ.தி.மு.க., அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ஒவ்வொரு அறையாக பார்வையிட்டார். தொடர்ந்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ேஹாட்டலுக்கு சென்று தங்கிய பின், இரவு 9:00 மணி அளவில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். ஆரம்பத்தில் பழனிசாமியுடன், தம்பிதுரை, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். அதன்பின், பழனிசாமியும், அமித்ஷாவும், தனியாக, 15 நிமிடங்கள் பேசினர்.
ஏற்கனவே, பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., தயாராகி வருவதாக, தகவல் வெளியான நிலையில், இந்த சந்திப்பு, கூட்டணியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த, 2019 முதல் தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க., அரசுக்கு எதிரான அலை இருந்தாலும், வலுவான கூட்டணி இல்லாமல், வரும் சட்டசபை தேர்தலில், அக்கட்சியை வீழ்த்த முடியாது.
தனிக்கட்சி துவங்கியுள்ள விஜய், தனித்து போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம். எனவே, பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம், அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., கூட்டணி இல்லாமல், கொங்கு மண்டலம், சென்னை போன்ற நகர பகுதிகள், கன்னியாகுமரி, துாத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் வெல்வது கடினம்.
இதை பழனிசாமியிடம் கட்சி நிர்வாகிகள் எடுத்துரைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே அமித்ஷாவை சந்தித்துள்ளார். என்ன பேசப்பட்டது என்பது இனிமேல் தான் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனும், நேற்று டில்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க., இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என, வாசன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
முடிவுக்கு வரும்!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்திப்புக்குப் பின், அமித் ஷா வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில், 'வரும் 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின், மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.