Paristamil Navigation Paristamil advert login

அமித் ஷாவுடன் மக்கள் பிரச்னைக்காகவே சந்திப்பு; இ.பி.எஸ்.,!

அமித் ஷாவுடன் மக்கள் பிரச்னைக்காகவே சந்திப்பு;  இ.பி.எஸ்.,!

26 பங்குனி 2025 புதன் 07:34 | பார்வைகள் : 369


மக்கள் பிரச்னைக்காகவே மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். அரசியல் எதுவும் பேசவில்லை. தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி அமைப்பார்கள். அதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி கால தாமதம் ஆகி கொண்டு இருக்கிறது. அதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். அதேபோல் பல்வேறு திட்டங்களுக்கான நிதிகளையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.

குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு, மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். கல்வி திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

தமிழகத்தில் தொடர்ந்து இருமொழி கொள்கை கடைபிடிக்கபட்டு வருகிறது. அதனை தொடர வேண்டும் என்றும், லோக்சபா தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம், இந்த மறுசீரமைப்பை நடத்த வேண்டும் என்றும், கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

தமிழகம் நீர்ப்பற்றாக்குறை மாநிலமாக இருக்கின்ற காரணத்திலே, தொடர்ந்து தமிழக மக்களுக்கு தேவையான நீர் கிடைப்பதில் சிக்கல் இருந்து கொண்டு இருக்கிறது. நிலையாக தமிழக மக்களுக்கு நீர் கிடைக்கின்ற விதமாக, கோதாவரி-காவிரி நீர் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்றும், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்டப்படுவதாக செய்தி வெளியாகி கொண்டு இருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

மேகதாது அணை கட்ட எக்காரணத்தை கொண்டும் மத்திய அரசு துணை நிற்க கூடாது என்றும், முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதேபோல் தமிழகத்தில் பல ரயில்வே திட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. அதற்கு தேவையான நிதி ஒதுக்கி விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டேன்.

தமிழகத்தில் டாஸ்மாக்கில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று இருப்பதாக, அமலாக்கத்துறை அறிக்கை வெ ளியிட்டுள்ளது. அதனை முழுமையாக விசாரித்து தவறு செ ய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டு இருக்கிறது. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

போதைப்பொருள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி, தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து, நாங்கள் கோரிக்கை மனு அளித்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வியும், பதிலும்!

நிருபர்: அரசியல் ரீதியாக இரண்டு தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ., இடையே கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டு விட்டது என்பதை நாம ஏற்றுக்கொள்ளலாமா?

இதற்கு இ.பி.எஸ்., அளித்த பதில்: நீங்கள் பத்திரிகையில் தான் போட்டு கொண்டு இருக்கிறீர்கள். அப்படி எதுவும் கிடையாது. இப்பொழுது முழுக்க முழுக்க மக்களின் பிரச்னைக்காக தான் வந்து இருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஒராண்டு இருக்கிறது.

தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி அமைப்பார்கள். அதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி வேறு கொள்கை வேறு; எங்கள் கொள்கை எப்போதும் நிலையானது. தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அங்கேயே இருக்கப்போகிறார்களா? இவ்வாறு இ.பி.எஸ்., பதில் அளித்தார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்