இது எல்லாம் 20 வருடம் தாமதம்; இடதுசாரி கட்சியை விமர்சித்த காங்., எம்.பி., சசி தரூர்!

26 பங்குனி 2025 புதன் 08:36 | பார்வைகள் : 216
தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்க சட்டசபையில் மசோதா நிறை வேற்றியதை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வரவேற்றுள்ளார். இந்த முடிவு எடுக்க 15 முதல் 20 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சசி தரூர் கூறியுள்ளார்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாய முன்னணி ஆட்சி செய்கிறது. நாட்டின் பிற மாநிலங்களை போல், இங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்க வகை செய்யும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அனுமதி வழங்கும் வகையில் தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
பொதுவாக அனைத்து துறைகளிலும் தனியார் மயமாக்கலை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட் ஆட்சியில், தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி தரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது பேசு பொருள் ஆனது. பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்ட பின், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.
இது குறித்து, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கூறியதாவது: கேரளத்தின் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கம் இறுதியாக சரியானதைச் செய்துள்ளது. இந்த முடிவு எடுக்க 15 முதல் 20 ஆண்டுகள் தாமதமாக ஆகி உள்ளது. இது பொதுவாக 19ம் நூற்றாண்டின் சித்தாந்தத்தில் நங்கூரமிட்டவர்களுக்கு பொருந்தும்.
கணினிகள் முதன் முதலில் இந்தியாவிற்கு வந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுத்துறை அலுவலகங்களுக்குள் நுழைந்து அவற்றை அடித்து நொறுக்கினர் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
இந்தியாவில் மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்படுவதை எதிர்த்த ஒரே கட்சிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். அவர்கள் ஒரு நாள் இறுதியாக 21ம் நூற்றாண்டில் நுழைவார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அது 22ம் நூற்றாண்டில் கூட நடக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.