தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; இ.பி.எஸ்

26 பங்குனி 2025 புதன் 16:52 | பார்வைகள் : 2071
தி.மு.க.,வில் இருக்கும் கட்சிகள் எல்லாம் நிலையா இருந்து இருக்கிறதா? இருக்கப் போகிறதா? சொல்ல முடியாதுங்க. இது அரசியல். சூழலுக்கு ஏற்றவாறு மாற்றம் வரும்' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் அளித்த பதில்; எந்தக் கட்சியாவது நிலையாக இருந்தது உண்டா? தி.மு.க.,வில் இருக்கும் கட்சிகள் எல்லாம் நிலையா இருந்து இருக்கிறதா? இருக்கப் போகிறதா? சொல்ல முடியாதுங்க. இது அரசியல்.
அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றம் வரும். அதை இப்போது எப்படி சொல்ல முடியும். தேர்தல் வரும் போது தான் கூட்டணி கட்சிகள் குறித்து அறிவித்து வருகிறோம், எனக் கூறினார்.
தமிழகத்தில் என்.டி.ஏ., கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு; ஒத்த கொள்கையுடன் கூடிய கட்சிகள் தி.மு.க., கூட்டணி கட்சிகள் கூறுகின்றன. அதில், நாங்கள் தலையிட முடியுமா? அது அவர்களின் விருப்பம். கூட்டணி பற்றி கவலையே பட வேண்டாம். பத்திரிக்கையாளர்களை அழைத்து முறைப்படி கூட்டணி குறித்து அறிவிப்போம்.
அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரைக்கும் தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும். அதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள். மக்கள் விரோத தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் அகற்றப்பட வேண்டும். அதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும், எனக் கூறினார்.