மனோஜ் பாரதிராஜாவை அடுத்து இன்னொரு மரணம்.. திரையுலகினர் அஞ்சலி..!

26 பங்குனி 2025 புதன் 14:34 | பார்வைகள் : 2751
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று மாரடைப்பு காரணமாக காலமான நிலையில், இன்று பழம்பெரும் நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனின் மனைவி காலமானதாக வெளிவந்த செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரை உலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்த் திரை உலகில் "லட்சிய நடிகர்" என்ற புகழ்பெற்ற எஸ். எஸ். ராஜேந்திரன், ஏராளமான படங்களில் ஹீரோவாகவும், சிவாஜிகணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். மேலும், சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, அரசியலிலும் ஈடுபட்டவர். 1962 ஆம் ஆண்டு, தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், இந்தியாவின் முதல் எம்.எல்.ஏ ஆன நடிகர் என்ற பெருமையை பெற்றார். பின்னர், அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தார்.
நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன், பங்கஜம், விஜயகுமாரி, தாமரை செல்வி ஆகிய மூவரை திருமணம் செய்துள்ளார். இன்று, அவரது மூன்றாவது மனைவி தாமரை செல்வி காலமானார். இதனை அடுத்து, திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தாமரை செல்வியின் மகன் கண்ணன், தொலைக்காட்சி நடிகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தாமரை செல்வியின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.