யேமன் மீதான தாக்குதல் -டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக கடும் விமர்சனம்

26 பங்குனி 2025 புதன் 17:03 | பார்வைகள் : 837
யேமன் மீதான தாக்குதல் திட்டங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் சமூக ஊடக குழு கலந்துரையாடலில் தவறுதலாக ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக கடும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க துணை ஜனாதிபதி டிஜேவான்ஸ் பாதுகாப்பு செயலாளர் பீட்டே ஹெக்செத் ஆகியோர் இடம்பெற்றிருந்த சிக்னல் குழு உரையாடலில் தானும் சேர்க்கப்பட்டதாக அட்லாண்டிக் மகசினின் ஜெவ்ரி கோல்ட்பேர்க் தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல் திட்டங்கள் குறித்த சில விடயங்களை தான் பார்த்ததாக தெரிவித்துள்ள அவர் ஆயுதங்கள் இலக்குகள் தாக்குதல்கள் எப்போது இடம்பெறவுள்ளன போன்ற விபரங்கள் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னர் தனக்கு தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தற்செயலாகவே தன்னை அந்த குழு உரையாடலில் இணைத்தார்கள் என தெரிவித்துள்ள ஜெவ்ரி கோல்ட்பேர்க் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் வோல்ட்சிடமிருந்தே தனக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் தவறுதலான தொலைபேசி இலக்கத்தை தெரிவு செய்கின்றார்கள் என்றால்,அவர்கள் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களை ஆதரிக்காத ஒருவரை தெரிவு செய்யவேண்டும், தகவல்கள் முன்கூட்டியே அம்பலமாகியிருந்தால் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமெரிக்க படையினரின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்தை சேர்ந்தவர்களின் இந்த அலட்சியம் குறித்து குடியரசுக்கட்சியினரும் ஜனநாயக கட்சியினரும் கடும் விமர்சனங்களையும் கரிசனைகளையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த தவறு குறித்து விசாரணைகளை கோரியுள்ள ஜனநாயக கட்சியினர் ,இது தேசிய பாதுகாப்பு மோசடி என தெரிவித்துள்ளனர்.
மிகமிகநீண்டகாலமாக நான் படித்த இராணுவ உளவுத்துறையின் அதிர்ச்சியூட்டும் மீறல்களில்இதுவும் ஒன்று என ஜனநாயக கட்சியின் செனட்டர் சக் ஜூமர் தெரிவித்துள்ளார்.