அரசியலில் பெண்கள் பிரச்னையை அதிகம் பேச வேண்டும்: ஸ்மிருதி இரானி

27 பங்குனி 2025 வியாழன் 06:51 | பார்வைகள் : 405
பெண்கள் பிரச்னை, அரசியலில் அதிகம் பேசப்பட வேண்டும். அப்போது தான் சமூகத்தில் ஆண், பெண் இடையிலான வேறுபாடுகள் மாறும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
பிக்கி ப்ளோ' எனப்படும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு சார்பில், ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண் தொழில் முனைவோருக்கு விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது; பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த ஏழு பெண்களுக்கு, சாதனையாளர் விருது ஆகியவற்றை, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்கினார்.
விழாவில், அவர் பேசியதாவது:
நம் நாட்டில் பல லட்சம் பெண்கள், அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பிற நாட்டினரால் கணக்கில் கொள்ளப்படுவது, பார்லிமென்டில் பேசக்கூடிய பெண்கள் மட்டுமே. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பதவிகளில் உள்ள பெண்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
இந்தியாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் தேர்தலில் வென்று பதவியேற்றுள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால், இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகம்.
அரசியல் என்பது வெற்றி, தோல்வியை பொறுத்ததல்ல. அது, மக்களுக்கு செய்யும் சேவையின் தன்மையை பொறுத்தது. அரசியலில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தொழில் மற்றும் கல்வியில் பெண்களில் முன்னேற்றம் முக்கியமானது.
உலக அளவில் 29 சதவீதம் பெண்களே, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறைகளில் பணியாற்றுகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 8 சதவீதம் பெண்களே, தலைமை பொறுப்புகளில் உள்ளனர். நிறுவனத்தின் துவக்க நிலையிலான பணிகளில், பெண்களைச் சேர்க்க அனைவரும் விரும்புகின்றனர்.
ஆனால், நிறுவனத்தின் அதிகாரம் படைத்த தலைமை பதவிகளில், பெண்களின் எண்ணிக்கை குறைவு. பெண்கள் பிரச்னை குறித்து, அரசியலில் அதிகம் பேசப்பட வேண்டும். அவ்வாறு பேசும்போது, சமூகத்தில் ஆண், பெண் இடையிலான வேறுபாடுகள் மாறும்.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் சட்டம் மட்டுமே இயற்ற இயலும். சமூக மாற்றம் நடந்தால் மட்டுமே, முழுமையான முன்னேற்றம் கிடைக்கும். இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.