அ.தி.மு.க., - பா.ஜ.,கூட்டணி இறுதியாகவில்லை!

27 பங்குனி 2025 வியாழன் 08:54 | பார்வைகள் : 579
டில்லியில் நடந்த அமித் ஷா - பழனிசாமி சந்திப்புக்கு பின்னரும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இறுதியாகவில்லை என்றே கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே பேச்சு தொடரும் என்கிறது அக்கட்சி வட்டாரங்கள்.
அ.தி.மு.க.,வில், பா.ஜ., கூட்டணியை விரும்பும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க, பலமான கூட்டணி அமைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் பழனிசாமிக்கு ஏற்பட்டு உள்ளது.
விஜய் கட்சிக்கு எவ்வளவு ஓட்டு என்பது தெரியாத நிலையில், அவரை கூட்டணியில் சேர்த்து, 'ரிஸ்க்' எடுக்க முடியாது என்பதால், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி போன்றவற்றை இணைத்து, மெகா கூட்டணி அமைத்தால், ஆட்சியை பிடிப்பது எளிது என, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், பழனிசாமியிடம் எடுத்துரைத்தனர்.
அதேநேரம், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு, பழனிசாமி உறவினர் வீடுகளில் நடந்த 'ரெய்டு' போன்றவையும், பழனிசாமிக்கு நெருக்கடிகள் கொடுத்தன.
இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் திடீரென பழனிசாமி டில்லி சென்றார். அவரை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் சென்றனர். இதைத்தான் பேசினோம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு, நேற்று சென்னை திரும்பினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவானதாக, தகவல்கள் வெளியாகின. டில்லியில் நேற்று காலை பழனிசாமி அளித்த பேட்டி, அதை உறுதி செய்யவில்லை. அதனால், கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை என்றும், இரு தரப்புக்கும் இடையே பேச்சு தொடரும் என்றும், அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
டில்லியில் நேற்று காலையில், பழனிசாமி அளித்த பேட்டி:
அமித் ஷாவை சந்தித்தபோது, தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளை, அவரிடம் எடுத்துக் கூறி, நடவடிக்கை எடுக்க கோரினோம்.
* தமிழக திட்டங்களுக்கு, மத்திய அரசிடமிருந்து வரக்கூடிய நிதி, கால தாமதம் ஆகிறது. திட்டங்களுக்கு தேவையான நிதியை விரைந்து தர வேண்டும் என்றும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், நிலுவைத் தொகை, கல்வி திட்ட நிதி தர வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
* தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும். தொகுதி மறுவரையறை செய்யும்போது, தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சீரமைப்பு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்தள்ளது. போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என, அமித்ஷாவிடம் மனு அளித்தோம்.
எந்த அவசரமும் இல்லை
பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க, டில்லிக்கு வந்ததாக செய்திகள் வெளியாகின்றன; உண்மை அதுவல்ல. மக்கள் பிரசனைக்காக மட்டுமே, டில்லி வந்து அமித்ஷாவை சந்தித்தோம்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஓராண்டு உள்ளது. அதற்குள் எந்த அவசரமும் இல்லை. ஊடங்கள்தான் தங்கள் போக்கில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி என எழுதுகின்றன. அ.தி.மு.க., டில்லி அலுவலகத்தை பார்ப்பதற்காக வந்தேன். நேரம் இருந்ததால், உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டோம். அனுமதி கிடைத்ததும் சந்தித்தோம். தமிழக மக்கள் பிரச்னைகள் குறித்து, 45 நிமிடங்கள் பேசினோம்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, ஒராண்டு உள்ளது. எனவே, கூட்டணி குறித்து பேச கால அவகாசம் உள்ளது. கடந்த 2019, 2021 தேர்தல்களின்போது, தேர்தல் நெருக்கத்தில்தான் கூட்டணி முடிவு செய்யப்பட்டது. கூட்டணி வேறு; கொள்கை வேறு. கொள்கை என்பது நிரந்தரமானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடியது.
தற்போது, தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம், அங்கேயே இருக்கப் போவதில்லை. நிறைய மாற்றங்கள் வரும். அதெல்லாம் தேர்தல் நெருக்கத்தில் தான் தெரியும். விறுவிறுப்பான செய்திக்காக, பா.ஜ.,வுடன் கூட்டணி என, என்னை சொல்ல வைக்க பார்க்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முறையான அறிவிப்பு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
'அமித் ஷா சொன்னால் நான் என்ன செய்வது?'
சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: கூட்டணி விவகாரத்தில், எந்த கட்சியாவது நிலையாக இருந்தது உண்டா? இவ்வளவு ஏன்... தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் நிலையாக இருந்திருக்கின்றனவா? இதை யாராலும் சொல்ல முடியாது; காரணம், இது அரசியல். அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் இருக்கும். கடந்த 2019ல் மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலுக்கு, பிப்., மாதம் தான், கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டோம்; 2021 சட்டசபை தேர்தலிலும் அப்படித்தான்.
தேர்தல் வரும்போது தான் அனைவரும் பேசி முடிவெடுக்க முடியும். கூட்டணி பற்றி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவரது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டால், நாங்கள் என்ன செய்வது? அது அவர்களின் விருப்பம்! அ.தி.மு.க., கூட்டணி அமைக்கும்போது, அனைவருக்கும் தெரிவிக்கப்படும். தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பது தான், எங்களின் ஒரே குறிக்கோள்; அதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
'எல்லாம் நன்மைக்கே!'
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், நேற்று சட்டசபைக்கு வந்தவரிடம், அமித் ஷா - பழனிசாமி சந்திப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, ''எல்லாம் நன்மைக்கே,'' என, அவர் பதில் அளித்தார். வேறு எதுவும் கூற மறுத்து விட்டார். அதேபோல், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கடம்பூர் ராஜு, உதயகுமார் போன்றோர், கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டனர்.