அதிகாரம் இல்லாமல் கட்சி கொள்கையை அமல்படுத்த முடியாது: சொல்கிறார் கார்கே

28 பங்குனி 2025 வெள்ளி 10:59 | பார்வைகள் : 267
காங்கிரஸ் கட்சியின் கொள்கை வலுவாக உள்ளது. ஆனால், அதிகாரம் இல்லாமல் அதனை அமல்படுத்த முடியாது,'' என அக்கட்சி தலைவர் கார்கே கூறினார்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்துரையாடலின் போது கார்கே கூறியதாவது: தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு மாநிலங்களில் நீண்ட கால திட்டங்களுடன் பணியாற்ற வேண்டும். கட்சியின் கொள்கை வலுவாக இருக்கிறது. ஆனால், அதிகாரம் இல்லாமல் அதனை அமல்படுத்த முடியாது.
அரசியலமைப்பை பாதுகாப்போம் என்று நாம் பிரசாரம் செய்தோம். இதன் மூலம் அரசியலமைப்பை மாற்ற முயற்சித்த பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ரகசிய திட்டத்தை அம்பலப்படுத்தினோம்.
தேர்தலில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறிய பிரதமர் மோடி, தற்போது நம்முன் தலைவணங்கி உள்ளார்.100 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கட்சியினர் கடுமையாக உழைத்து இன்னும் 20 முதல் 30 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தால், மத்தியில் மாற்று அரசை அமைத்து இருப்போம்.
இதனை நாம் செய்து இருந்தால், ஜனநாயகம், அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இருக்க முடியும். பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு எதிராக பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியேயும் போராடி வருகிறோம். இந்த போராட்டத்தை வீதிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.