Paristamil Navigation Paristamil advert login

நட்பு நாடுகளுக்கு எதிராக வர்த்தகப்போர்- அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

நட்பு நாடுகளுக்கு எதிராக வர்த்தகப்போர்- அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப்

28 பங்குனி 2025 வெள்ளி 14:04 | பார்வைகள் : 2846


அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ,ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் இணைந்து செயல்பட்டால், அந்த இரண்டு நாடுகளும் மீது அதிக வரிகள் விதிக்கப்படலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அது, தற்போது திட்டமிடப்பட்டதை விட மிகப் பெரிய அளவிலான வரிகளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ட்ரம்ப் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீது 25 வீத வரி விதிப்பை கடந்த புதன்கிழமையன்று அறிவித்தார்.

இது உலகளாவிய வர்த்தகப் போரை விரிவுபடுத்தியதுடன், பாதிக்கப்பட்ட அமெரிக்க நட்பு நாடுகளிடமிருந்து விமர்சனங்களையும் பழிவாங்கும் அச்சுறுத்தல்களையும் தூண்டியுள்ளது.

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இந்த நடவடிக்கையை வணிகங்களுக்கு மற்றும் நுகர்வோருக்கு மோசமானது என்று விபரித்துள்ளார்.

அதே நேரத்தில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி இந்த வரிகளை கனேடிய தொழிலாளர்கள் மீதான "நேரடி தாக்குதல்" என்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

இ;ந்தநிலையில், 2025 ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் சிற்றூர்ந்துகள் மற்றும் இலகுரக பாரவூர்திகள் மீதான புதிய வரிகள் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் அதன் முதல் எதிர் நடவடிக்கைகளை ஏப்ரல் நடுப்பகுதி வரை தாமதப்படுத்துவதாகக் கூறியுள்ளது.

எனினும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினால், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து வைய்ன்கள் மற்றும் பிற மதுபானப் பொருட்களுக்கான வரியை 200 வீதமாக உயர்த்தப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்