விக்ரம் கம்பேக் கொடுத்தாரா ?

29 பங்குனி 2025 சனி 08:13 | பார்வைகள் : 2124
ஊர் பெரியவரான பிருத்விராஜ் வீட்டின் முன் பெண்மணி ஒருவர் எனது கணவரை நீங்கள் தான் மறைத்து வைத்துள்ளீர்கள் என தனது மகளுடன் வந்து சண்டை போடுகிறார். அந்தப் பெண்மணியை பெரியவர் மகனான சுராஜ் வெஞ்சரமுடு அடித்து விரட்டுகிறார். இதனையடுத்து அந்தப் பெண்மணியின் கணவர் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் தனது மனைவியை காணவில்லை என புகார் கொடுக்கிறார். அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் எஸ்பி, எஸ் ஜே சூர்யாவிடம் தனது மனைவியை, பெரியவர் ஏதோ செய்து விட்டதாக சொல்லி விரைவாக கண்டுபிடிக்கும்படி கேட்கிறார். ஏற்கனவே பெரியவர் மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சரமுடு மீது முன் கோபத்தில் இருக்கும் எஸ்ஜே சூர்யா இதைப் பயன்படுத்தி, அந்த பெண்மணியை கொலை செய்துவிட்டு அந்த பழியை இவர்கள் இருவர் மீது போட்டு அவர்களை அன்று இரவுக்குள் என்கவுண்டர் செய்துவிட பிளான் போடுகிறார். இந்த விஷயம் பெரியவருக்கு கசிந்து விடுகிறது.
இதனால் மகன் சுராஜ் வெஞ்சரமுடுவை தலைமறைவாக இருக்கச் சொல்லிவிட்டு எஸ் ஜே சூர்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். அதற்காக அப்பகுதியில் மளிகை கடை வைத்து மனைவி துஷாரா விஜயன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் விக்ரமின் உதவியை நாடுகிறார். ஏற்கனவே விக்ரமுக்கு பெரியவர் செய்த உதவி காரணமாக விக்ரமும் இந்த வேலையை முடிப்பதாக சொல்லி ஆயுதங்களை வாங்கிக் கொண்டு செல்கிறார். அன்றைய தினம் ஊர் திருவிழா என்பதால் பொதுமக்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று விடுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்கவுண்டர் நடத்த எஸ்ஜே சூர்யா திட்டம் போடுகிறார். அதேநேரம் பெரியவர், விக்ரமை வைத்து எஸ்ஜே சூர்யாவை முடிக்க திட்டம் தீட்டுகிறார். இவர்கள் இருவரின் திட்டமும் நிறைவேறியதா? இல்லையா? விக்ரம் இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே படத்தின் மீதி கதை.
வழக்கமான ரிவெஞ்ச் கதை என்றாலும் அதை முடிந்த அளவு சுவாரஸ்யமாகவும், அதே நேரம் புதுமையாகவும் சொல்லி இருப்பது இயக்குநர் எஸ்யு அருண்குமாரின் திறமையை காட்டுகிறது. ஒரு இரவுக்குள் நடக்கும் கதையை மூன்று மணி நேரத்துக்கு கிரிப்பிங் ஆக சொல்லி இருக்கிறார் இயக்குநர். அதற்காக அவர் தேர்வு செய்துள்ள நடிகர்கள் அந்த ப்ரேமில் பர்பெக்டாக பொருந்தி உள்ளனர். திரைக்கதை வசனமும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார். விக்ரமை காளி கேரக்டரில் மாஸாக காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.
விக்ரமின் நடிப்புக்கு தீனி போட்டுள்ள ஒரு சில இயக்குநர்களில் இனி அருண்குமார் இணைந்து விடுவார். பல காட்சிகளில் தனது அனுபவ நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் விக்ரம். காளியாக மாஸ் காட்டி மிரள வைத்துள்ளார். கிளைமாக்ஸ் கட்சியில் இடம் பெற்றுள்ள மதுரை வீரன் தானே... என்ற தூள் பட பாடல் ஒலிக்கும்போது தியேட்டர் அதிர்கிறது.
போலீஸ் எஸ்பியாக நடித்துள்ள எஸ்ஜே சூர்யா தனது அசுரத்தனமான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை தாங்கிப் பிடிக்கிறார். அவருடைய டயலாக் டெலிவரி அந்த கேரக்டருக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. பெரியவராக வரும் பிருத்வி ராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சரமுடு வில்லத்தனத்தில் மிரட்டி உள்ளனர்.
துஷாரா விஜயன் கதைக்கு மிகப்பெரிய பலம். காளி என்ற காளையை தனது கண்களால் அடக்கி விடுகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாக முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார். அதேபோல் அம்மாவாக வரும் ஸ்ரீஜா ரவி, பெரியவர் மனைவியாக வரும் மாலா பார்வதி மற்றும் நண்பனாக வரும் பாலாஜி ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக தந்துள்ளனர்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது. படம் முழுவதும் இரவில் எடுக்கப்பட்டு இருந்தாலும் தனது லைட்டிங் மூலம் பகல் போல் காட்டி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது. பின்னணி இசையில் தனி முத்திரை பதிக்கிறார்.
பழிவாங்கும் ஒன் லைன் கதையை அழகான திரைக்கதை மூலம் கமர்ஷியல் படமாக எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அதோடு இந்த கதையை இரண்டு பாகங்களாக தயார் செய்து அதில் இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு தனது கிரியேட்டிவ் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் அருண்குமார். அவருடைய முந்தைய படங்கள் ஏற்படுத்திய பாதிப்பை இந்த படத்திலும் உணர முடிகிறது. அதேநேரம் பெரியவருக்கும் எஸ்பி-க்கும் இருக்கும் பழைய பகை குறித்தும், விக்ரமுக்கும் பெரியவருக்கும் உள்ள நெருக்கம் குறித்தும் கொஞ்சம் டீட்டைலாக சொல்லி இருக்கலாம். போலீஸ் பவர் மூலம் போலி என்கவுண்டர் செய்ய நினைப்பதும், எஸ்பியை வில்லன் கொல்ல நினைப்பதும் கொஞ்சம் சினிமாத்தனம். முதல் பாகத்திற்கான லீட் எதுவும் கடைசியில் கொடுக்கப்படாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது.