உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

29 பங்குனி 2025 சனி 10:24 | பார்வைகள் : 562
டினிப்ரோவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் வரை உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உக்ரைன் நகரமான டினிப்ரோவில் ரஷ்யாவின் தொடர் ட்ரோன் தாக்குதல்கள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ட்ரோன் தாக்குதலில் நான்கு அப்பாவி மக்கள் பலியாகியதோடு, மேலும் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பிராந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த அதிர்ச்சிகரமான தாக்குதலில் உணவக வளாகம் மற்றும் பல குடியிருப்பு கட்டிடங்கள் தீப்பிடித்து சாம்பலாகியுள்ளன என்று பிராந்திய தலைவர் செர்ஹி லிசாக் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக வெளியான வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளில், சேதமடைந்த கட்டிடங்களை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைக்கும் காட்சிகள், மற்றும் நகரத்தின் சாலைகளில் சிதறிக்கிடக்கும் உடைந்த கண்ணாடி மற்றும் குப்பைகள் போன்ற அதிர்ச்சியூட்டும் காட்சி பார்க்க முடிகிறது.
அதே நேரத்தில் தலைநகர் கீவ் உட்பட பல உக்ரைன் பிராந்தியங்களில் இரவு முழுவதும் விமான தாக்குதலுக்கான அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
இதனால் இரவு முழுவதும் உக்ரைனின் பல பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் ஏதேனும் சேதம் அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது தற்போது வரை உறுதியாகத் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து ரஷ்ய இராணுவம் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை.
தனது இரவு நேர வீடியோ உரையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை வேண்டுமென்றே குறிவைப்பதாக மீண்டும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.