மியான்மர் நிலநடுக்கம்- அழிவின் கோரத்தை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

30 பங்குனி 2025 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 2625
மியான்மரில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்களின் பேரழிவுகளை விவரிக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை மாண்டலே நகருக்கு அருகே 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் அதிர்வலைகள் சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாங்காக் வரை எதிரொலித்தன.
மேலும் இதனை தொடர்ந்து சில நிமிட இடைவெளியில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்தின.
இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் சிக்கி கிட்டத்தட்ட 1600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 3,500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் மியான்மர் தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த நிலநடுக்க பாதிப்புகளை வெளிக்காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மாண்டலே நகரம் இப்போது நிலநடுக்கத்தின் தீவிரமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதன் உள்கட்டமைப்பு சிதைந்து, குடியிருப்பாளர்கள் பேரழிவால் தவிக்கின்றனர்.
நகரத்தின் விமான நிலையம், முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கியமான பாலங்கள் உள்ளிட்ட முக்கியமான வசதிகள் கணிசமான சேதத்தை சந்தித்து இருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்களில் நன்கு பார்க்க முடிகிறது.
நெய்பிடா சர்வதேச விமான நிலையத்திற்கு ஏற்பட்ட சேதம் சர்வதேச நிவாரண முயற்சிகளுக்கு தளவாட சவால்களை உருவாக்கியுள்ளது.