பல நாடுகளுக்கு கோவிட் 19 தடுப்பூசி விநியோகம்; மத்திய அரசுக்கு சசி தரூர் பாராட்டு

31 பங்குனி 2025 திங்கள் 05:37 | பார்வைகள் : 1799
பல நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை விநியோகிக்க உதவிய நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் முயற்சியை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பாராட்டி உள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி காங்., எம்.பி.,யான சசி தரூர் பிரதமர் மோடியை அடிக்கடி பாராட்டி வருகிறார். அமெரிக்காவின் வாஷிங்டனில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியதை, காங்., மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.,யுமான சசி தரூர் சமீபத்தில் பாராட்டி பேசினார். தொடர்ந்து பாராட்டி பேசி வருவது காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை விநியோகிக்க உதவிய நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் முயற்சியை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: உலகின் தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா கோவிட் 19 காலத்தில் திகழ்ந்தது. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு கணிசமாக உயர்ந்தது.
கோவிட் 19 தொற்றுநோய் உச்சத்தில் இருந்த போது வளரும் நாடுகளுக்கு இந்தியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை விநியோகம் செய்தது. சமமான தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு இந்தியா பங்களித்தது. தொற்றுநோயின் இருண்ட காலத்திலும், உலகளாவிய சுகாதார ராஜதந்திரத்தில் இந்தியா தனது திறமையை வெளிப்படுத்தியது.
நெருக்கடியான நேரங்களில் பல்வேறு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் திறனை தடுப்பூசி விநியோகம் வெளிப்படுத்தியது. பணக்கார நாடுகள், தங்கள் சொந்த குடிமக்களுக்காக அதிக அளவிலான தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கு தங்கள் வளங்களை செலவிட்டன.
அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் தூக்கி எறியப்பட வேண்டியிருந்தது, ஏனெனில் அவை ஏழை நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தால் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். இவ்வாறு சசி தரூர் கூறினார்.