எக்ஸ் தளத்தின் வாதத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு

31 பங்குனி 2025 திங்கள் 09:41 | பார்வைகள் : 1587
மத்திய அரசின், 'சகயோஹ்' தளம், ஒரு தணிக்கை தளமாக செயல்படுவதாக, 'எக்ஸ்' சமூக வலைதளம் கூறியுள்ளதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளில் ஆட்சேபனை இருந்தால், அவற்றை நீக்கும்படி, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு உத்தரவிட்டு வருகிறது. இதற்காக, சகயோஹ் என்ற பொது தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த தளத்தின் வாயிலாக, சமூக வலைதளங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளை எதிர்த்து, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளம், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில், 'சகயோஹ் தளம், ஒரு தணிக்கை தளமாக செயல்படுகிறது. குறிப்பிட்ட பதிவுகளை முடக்கும்படி இந்தச் சட்டப் பிரிவுகளின்படி உத்தரவிட முடியாது' என, கூறப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தச் சட்டப் பிரிவுகளை வைத்து தவறான வாதங்களை முன்வைத்து எக்ஸ் சமூக வலைதளம் திசை திருப்ப பார்க்கிறது. மேலும், சகயோஹ் தளத்தை, தணிக்கை தளம் என்று குறிப்பிடுவது தவறான வாதம்.
இந்த சட்டப் பிரிவுகளின்படி, ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை நீக்கும்படிதான் உத்தரவிடப்படுகிறது. குறிப்பிட்ட பதிவு வெளியிடுபவரின் கணக்கை முடக்க உத்தரவிடப்படுவதில்லை. ஏதோ தான் ஒரு பயனாளியாக காட்டுவதற்கு எக்ஸ் தளம் முயற்சிக்கிறது.
அதனுடைய தளத்தில் வெளியாகும் ஆட்சேபகரமான பதிவுகளை, இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி நீக்க வேண்டிய பொறுப்பு அதற்கு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.