விஜய் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்: சீமான்

31 பங்குனி 2025 திங்கள் 12:43 | பார்வைகள் : 1978
தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் என்ற நடிகர் விஜயின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்று முறையாக தெரிவிக்கவில்லை.
நம்பிக்கை குறைவு
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், இதுவரை குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. கண்டுபிடிக்கும் அளவுக்கு விசாரணை ஏஜன்சிக்கு தகுதி இல்லையோ எனத் தோன்றுகிறது.
தேர்தல் ஆணையம், ஆட்சியில் இருப்பவர்களின் அதிகார ஆணையமாகச் செயல்படுகிறது.
என் மீது போடப்பட்டிருக்கும் நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளையும் சேர்த்து, ஒரே வழக்காக விசாரிக்க கோரினேன். அதற்கு, உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஆனால், அதே நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கை, ஒரே இடத்தில் விசாரிக்கலாம் என கூறுகிறது. இதனால், நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை குறைகிறது.
அடுத்த தமிழக முதல்வர் யார் என்ற கேள்வியோடு, கருத்துக் கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் முதல் இடம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், இரண்டாம் இடம் நடிகர் விஜய்க்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.
நாம் தமிழர் கட்சியை அந்த கருத்துக் கணிப்பில் ஒரு கட்சியாக இணைக்காமல், கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர். அப்படியென்றால், அது கருத்து திணிப்பா?
நாம் தமிழர் கட்சி, எக்கட்சியுடனாவது கூட்டணி சேருமா என தொடர்ந்து கேட்கப்படுகிறது.
எத்தனையோ முறை சொல்லி விட்டேன். கட்சி தனித்துத்தான் போட்டியிடும்; இதில் மாற்றுக் கருத்தில்லை.
அரசியலில் வியாபாரிகளுக்கும், போராளிகளுக்கும் வித்தியாசம் உள்ளது.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகைக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருக்கிறது என சர்ச்சை கிளப்புகின்றனர்.
வழக்கு விசாரணை நடக்கிறது. நியாயமான விசாரணை நடந்து யாருக்கு தொடர்பு என்பதை கண்டறிந்து, சட்டத்தின் வழியே தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
பிரபல யு - டியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் துப்புறவு தொழிலாளர்கள் போர்வையில் நாசம் செய்துள்ளனர்.
அதில், குற்றவாளி யார் என தெரிந்தும், உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? எதற்காக சி.பி.சி.ஐ.டி., விசாரணை?
குற்றவாளிகள் கையில் அதிகாரம் இருப்பதால் தான், குற்றங்கள் அதிகம் நடக்கின்றன.
செயின் பறிக்கும் குற்றவாளிகளை சுட்டுப் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழகத்தில் குடித்துவிட்டு பாட்டிலை திருப்பிக் கொடுத்தால், 10 ரூபாயும், குடித்துவிட்டு பாடையில் படுத்தால், 10
லட்சம் ரூபாயும் அரசு கொடுக்கிறது.
தி.மு.க.,வை வீழ்த்தணும் என்ற விஜயின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். கூட்டத்தோடு நிற்க, துணிவு தேவையில்லை, தனித்து நிற்கத்தான் துணிவு தேவை. இன்னும், நான்கு, ஐந்து மாதங்களில் யார், யார் எங்கு செல்கிறார்கள் என்று தெரியும்.
நாங்கள் எங்கு நிற்கிறோம் என்பதும் தெரியும். சின்னம் வந்தவுடன் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பேன்.
இவ்வாறு சீமான் கூறினார்.