பிரதமர் மோடியை விமர்சித்த விஜய்க்கு சரத்குமார் பதிலடி

31 பங்குனி 2025 திங்கள் 03:44 | பார்வைகள் : 496
த.வெ.க., பொதுக்குழுவில், விஜய் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்து பேசியது, விநோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. உலக அளவில் இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது.
விரைவில், மூன்றாவது இடத்தை பிடிக்கும் என, சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் பிரதமர் மோடியை, சர்வதேச தலைவர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
அவர் குறித்து பேசுவதற்கு முன், உண்மை தெரிந்து பேசியிருக்க வேண்டும். எதற்காக, மாநில அரசுக்கு, கல்விக்கான நிதியை, மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. வரி பங்கீடு ஏன் குறைகிறது.
எவ்வளவு ஒதுக்கீடு செய்திருக்கின்றனர் என்ற விபரங்களை அறிந்து, பொதுக்குழுவில் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கடந்த 2004 - 14ம் ஆண்டில், தமிழகத்திற்கு வரிப்பகிர்வு, 94,971 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 2014 - 24ம் ஆண்டில், 2 லட்சத்து, 92 ஆயிரத்து 13 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இது 207 சதவீதம் அதிகம். கடந்த 2004 - 14ம் ஆண்டில், மத்திய அரசின் உதவி மற்றும் மானியங்கள் வாயிலாக, 57,925 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், 2014 - 24ம் ஆண்டில், 2 லட்சத்து 55 லட்சத்து 975 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இது 342 சதவீதம்.
மத்தியிலே நடக்கும் சிறந்த ஆட்சியை, உலகம் போற்றும் பிரதமர் மோடியை, சாதாரண மனிதராக எண்ணி, கேலியாக பேசியது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.