விவேகானந்தர் பாறையில் காவிக்கொடி அகற்றும் முயற்சி தற்காலிக நிறுத்தம்

1 சித்திரை 2025 செவ்வாய் 09:07 | பார்வைகள் : 278
அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கையுடன் சேர்த்து கன்னியாகுமரி கடல் நடுவில் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் காவி கொடியை அகற்ற நடந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவின்படி தமிழகம் முழுதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள் உள்ளிட்ட கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகிறது. கட்சிகள் தாங்களாகவே முன்வந்து கொடிக்கம்பங்களை அகற்றி வருகின்றன.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் தினமும் காலை 6:00 மணிக்கு சைரன் ஒலியுடன் ஏற்றப்படும் காவிக்கொடி மாலை 6:00 மணிக்கு சைரன் ஒலியுடன் இறக்கப்படும்.
அரசியல் கொடி கம்பங்கள் முழுமையாக அகற்றப்படும் நிலையில் விவேகானந்தர் பாறையில் உள்ள கொடிக்கம்பத்தையும் அகற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் விவேகானந்தா கேந்திராவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
விவேகானந்தர் பாறையில் நினைவு மண்டபம் நிறுவியது முதல் 55 ஆண்டுகளாக இந்த கொடி பறந்து வரும் நிலையில் இதை அகற்ற கூடாது என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது.
விவேகானந்தா கேந்திரா சார்பில் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் மூலம் மாவட்ட கலெக்டரிடம் இந்த கொடி கம்பத்தை அகற்றக் கூடாது என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டி பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த நோட்டீஸ் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கடல் நடுவில் அமைந்துள்ளதாலும், இதனால் போக்குவரத்து உள்ளிட்ட எந்த பிரச்சனை ஏற்படாது என்பதாலும் இந்த கொடி கம்பத்தை அகற்றக்கூடாது என்று பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வலுத்துள்ளது.