டாஸ்மாக் பக்கமே அமலாக்க துறை வரக்கூடாது; ஐகோர்ட்டில் தமிழக அரசு அதிரடி மனு

1 சித்திரை 2025 செவ்வாய் 11:08 | பார்வைகள் : 1291
பண மோசடி தொடர்பாக, 'டாஸ்மாக்' நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு முன், இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம் 6 முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின், மதுபான கொள்முதல் நடவடிக்கைகளில், 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
விரோதமானது
'அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது; மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானதாக அறிவிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்; எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்களையும் அமலாக்கத்துறை தெரிவிக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அறிவித்தனர். இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படியும் பரிந்துரைத்தனர்.
அதேநேரத்தில், அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல், பொத்தாம் பொதுவாக உள்ளதால், அதை திருத்தம் செய்து, புதிய மனு தாக்கல் செய்ய, அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
திருத்தப்பட்ட மனு
அதன்படி, டாஸ்மாக் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு, டாஸ்மாக் நிறுவனமும், தமிழக அரசும் இணைந்து திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்துள்ளன.
அதில் உள்ள முக்கியமான கோரிக்கைகள்:
மனி லாண்டரிங் தடுப்பு சட்டத்தில், 'நபர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது; அரசு, அரசு அதிகாரி, அரசின் நிறுவனம் ஆகியவற்றுக்கு அந்த சட்டம் பொருந்தாது. அவர்கள் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க முடியாது
மேற்படி சட்டத்தின் கீழ் மாநில அரசின் அதிகாரிகளுக்கான பொறுப்பு, அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு உதவி செய்வது மட்டுமே என்று கோர்ட் அறிவிக்க வேண்டும்
அவ்வாறு உதவி செய்வதற்கு மாநில அரசு எந்த அதிகாரிகளை நியமனம் செய்கிறதோ, அவர்களின் உதவியை மட்டுமே அமலாக்கத் துறை கேட்க முடியும் என கோர்ட் உத்தரவிட வேண்டும்
அவ்வாறு அமலாக்கத் துறை கேட்கும் உதவி என்பது, செக்ஷன் 54ன் கீழ் வரும் விசாரணைக்காக மட்டுமே தவிர, செக்ஷன் 17ன் கீழ் வரும் சோதனை, பறிமுதல் ஆகியவற்றுக்கோ அல்லது செக்ஷன் 50ன் கீழ் வரும் சம்மன் அனுப்புவது, ஆவணங்களை தாக்கல் செய்வது போன்ற வேலைகளுக்கோ பொருந்தாது என கோர்ட் அறிவிக்க வேண்டும்
தமிழக அரசுக்கு சொந்தமான எந்த நிறுவனத்திலும், கட்டடத்திலும் அமலாக்கத்துறையினர் மேற்படி சட்டத்தின் 17வது செக்ஷனை காட்டி, நுழையவோ, சோதனை நடத்தவோ, பறிமுதல் செய்யவோ கூடாது என்று கோர்ட் உத்தரவிட வேண்டும்
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மார்ச் 6ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் நுழைந்ததும், சோதனை நடத்தியதும், ஆவணங்களை பறிமுதல் செய்ததும் சட்டவிரோதமானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஆகவே செல்லாது என்று கோர்ட் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசு விரிவாக மனுவை தயாரித்துள்ளது.