செப்டம்பரில் பிரதமராக மோடி நீடிப்பார்

1 சித்திரை 2025 செவ்வாய் 12:11 | பார்வைகள் : 509
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்துக்கு சென்றபோது, பிரதமர் பதவியில் இருந்து செப்டம்பர் மாதம் ஓய்வு பெறப் போவதாக தெரிவித்தார்' என்று வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த தகவலுக்கு, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரதமராக பொறுப்பேற்ற 11 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்துக்கு மோடி சென்றார்.
உதவி தேவையில்லை
ஆட்சி நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலையீடு இருக்கக்கூடாது என்று பிரதமர் மோடி நினைக்கிறார்; அதனால் தான், அதன் தலைமையுடன் நெருக்கமாக இல்லை என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகின. அவற்றுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக இரு தரப்புமே கருதவில்லை.
எனினும், கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா அளித்த பேட்டி, இரு தரப்பு உறவு குறித்த வதந்திகளுக்கு உரமிட்டது.
'முன்பெல்லாம் தேர்தலின்போது ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் உழைப்பும், உதவியும் பா.ஜ.,வுக்கு தேவைப்பட்டது. இப்போது கட்சி பெரிதாக வளர்ந்துவிட்டது; யாருடைய உதவியும் இல்லாமல் தேர்தலை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும் என்ற அளவுக்கு பலம் பெற்றுள்ளோம்' என்று நட்டா கூறியிருந்தார்.
பா.ஜ., கட்சியை உருவாக்கியதே ஆர்.எஸ்.எஸ்., தான் என்ற நிலையில் நட்டா அவ்வாறு கூறுவது பிரச்னையை உருவாக்காதா என்று அவரிடமே கேட்டதற்கு, 'தான் உருவாக்கிய இயக்கம் தன் உதவி தேவைப்படாத அளவுக்கு வளர்ந்து பலம் பெற்றிருப்பதை ஆர்.எஸ்.எஸ்., பெருமையாகக் கருதுமே தவிர, கசப்புக்கு இடமளிக்காது' என்று பதில் அளித்தார்.
நட்டாவின் கருத்தை ஆர்.எஸ்.எஸ்., தலைமை எதார்த்தமாக எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு தேர்தலின்போதும் கடுமையாக களப்பணி ஆற்றும் அந்த இயக்கத்தின் தொண்டர்கள் சுலபமாக கடந்து செல்லவில்லை.
நெருடல்
கடந்த லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தில், பா.ஜ., கட்சியை காட்டிலும் மோடி என்ற தனிமனிதர் பிரதானமாக முன்னிறுத்தப்பட்டதும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. 'மோடி கேரன்டி' என்ற கோஷத்தை மோடியே ஒவ்வொரு கூட்டத்திலும் உச்சரித்தது நெருடலாக இருந்தது.
இந்த பின்னணியில், முந்தைய தேர்தல்களை போல இம்முறை பா.ஜ., வெற்றிக்காக ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் களப்பணியை பார்க்க முடியவில்லை என ஊடகங்கள் எழுதின.
தேர்தல் முடிவு வந்தபோது, பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற உண்மை, இரு தரப்பு உறவில் விரிசல் உருவானதை வெளிச்சமிட்டு காட்டியது. சிறு கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்க நேர்ந்ததால், பா.ஜ., தலைமையின் இறுக்கம் தளர்ந்தது.
ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுடன் இணக்கம் ஏற்படுத்த முயற்சி எடுத்தனர். அதன் தலைவர் மோகன் பகவத்தின் உரைகளை, பிரதமர் மோடி தன் சமூக ஊடகங்களில் பகிரத் துவங்கினார்.
அந்த முயற்சிகளின் முத்தாய்ப்பாக பிரதமரின் நாக்பூர் பயணம் முடிவு செய்யப்பட்டது. பா.ஜ., தலைவர் நட்டாவுக்கு அந்த பதவியில் நீட்டிப்பு தரப்பட்டு, அதுவும் விரைவில் முடிய உள்ளது.
அடுத்த தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலையில், மோடியின் வருகையை ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் கையாண்டுள்ளது. இதனால் பல யூகங்கள் உலா வருகின்றன.
'பா.ஜ., கட்சி விதிகளின்படி, 75 வயதை கடந்தால், கட்சி மற்றும் அரசு பதவியில் இருந்து ஓய்வு பெறுவது வழக்கம். அதன்படி, தன் ஓய்வு முடிவை முறைப்படி தெரிவிக்கவே ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்துக்கு மோடி சென்றார்' என, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
''வரும் செப்., 17-ல் மோடிக்கு 75 வயதாகிறது. 75 வயது ஆனதும், பா.ஜ.,வில் பல தலைவர்கள் ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே தான் இப்போதும் நடக்கும். அடுத்த பிரதமர், மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருப்பார்,'' என்றும் அவர் சொன்னார்.
மறுப்பு
இது, டில்லி, மஹாராஷ்டிரா மட்டுமின்றி நாடெங்கும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முதல் நபராக இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
'மோடி தான் எங்கள் தலைவர். அவரே பிரதமராக தொடருவார். அடுத்து வரும் 2029 லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று, நான்காவது முறையாக பிரதமராகி, நாட்டை வழி நடத்துவார்.
'ஒரு குடும்பத்தில் தந்தை உடல்நலத்துடன் இருக்கும்போது, அடுத்தது யார் என்ற பேச்சே எழாது. அப்படி பேசுவது, இந்திய கலாசாரம் கிடையாது; அது முகலாய கலாசாரம்' என்று பட்னவிஸ் கூறினார்.