வரலாற்றுப் பக்கம்!! - 1949 - பிரான்சை உலுக்கிய காட்டுத்தீ!!
13 தை 2017 வெள்ளி 12:30 | பார்வைகள் : 18910
இயற்கை அழிவுகள் எல்லா நாட்டுக்குமே பொதுவானவை! வருடம் முழுவதும் பூகம்பம் ஏற்படும் நாடுகளும் உள்ளன... எப்போதும் எரிமலை குழம்புகளை வாரி கொட்டும் தேசங்களும் உள்ளன. பிரான்ஸ் மட்டும் விதிவிலக்கா? கடந்த வருட இறுதியில் பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவே வெள்ளத்தில் மூழ்கியது நினைவிருக்கலாம். 16 அடிவரை நீர்மட்டம் உயர்ந்து கிலி ஏற்படுத்தியது. அதே போது ஹெக்டேயர் கணக்கில் எரிந்து சாம்பலான காட்டுத்தீயும் ஏற்பட்டிருந்தது. இருக்கட்டும்... இன்று பிரெஞ்சு புதினத்தில் பிரான்சில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ குறித்த விபத்தை பற்றி பாக்கலாம்!
சம்பவம் இடம்பெற்றது 1949 ஆம் ஆண்டு! 68 ஆண்டுகளுக்கு முன்னர். ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி 1949 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த காட்டுத்தீ... தொடர்ந்து ஆறு நாட்கள் விடாமல் காடுகளை எரித்து தள்ளியது. இரவு பகல் பாராமல் கொழுந்துவிட்டு எரிந்த தீக்கு.. துணையாக ஆகஸ்ட் மாத பெரும் காற்று வீசியது. தொடர்ந்து ஆறு நாட்கள் காடுகள் எரிந்து சாம்பல் ஆகின. மொத்தம் 50 ஆயிரம் (50,000) ஹெக்டேயர்கள் எரிந்து அழிந்தது. பிரான்ஸ் உட்பட மொத்த ஐரோப்பாவே இதுபோன்ற ஒரு பாரிய காட்டுத்தீயை முன்னரும் அதன் பின்னரும் கண்டதில்லை.
பத்தாயிரம் கிலோ மீட்டர்கள் பரப்பு கொண்ட La forêt des Landes என அழைக்கப்படும் Landes காட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. மொத்தம் 500 கிலோமீட்டர்கள் ஆறு நாட்களில் எரிந்து சாம்பல் மேடாகிப்போனது. Cestas, Saucats, Marcheprime மற்றும் Mios ஆகிய நகரங்கள் பேரழிவுக்கு உட்பட்டன. ஆறு நாட்கள் முடிவில் மொத்தமாக 82 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த காட்டுத்தீயை மையமாக வைத்து பெல்ஜிய காமிக்ஸ் நிறுவனம் ஒன்று காமிக்ஸ் கதையை வெளியிட்டது. விமான விபத்தொன்றில் உயிர் தப்பி காட்டுக்குள் வந்து சேரும் சிறுவர்கள் குழாம் ஒன்று காட்டுத்தீயில் இருந்து எப்படி தப்பித்தார்கள் என நீள்கிறது அக்கதை!
அதன் பின்னரும் வருடா வருடம் தீ விபத்துக்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த விபத்து அவ்வளவு எளிதில் மறக்க முடியாதது!!