Paristamil Navigation Paristamil advert login

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சாதாரண வழக்கு; அதே நாளில் ஜாமின்: இ.பி.எஸ்., காட்டம்!

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சாதாரண வழக்கு; அதே நாளில் ஜாமின்: இ.பி.எஸ்., காட்டம்!

4 சித்திரை 2025 வெள்ளி 12:45 | பார்வைகள் : 318


வரும் சட்டசபை தேர்தலில் பொய் பேசி ஓட்டுக்களை பெற்ற தி.மு.க.,வுக்கு மரண அடி கொடுப்பார்கள்' என்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; 10 நாட்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் வீட்டில் 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி, அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றதுடன், பல பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். வீட்டுக்குள் மனிதக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுகளை கொட்டியுள்ளனர். இதை வன்மையாக கண்டித்துள்ளோம்.

இதுபோன்ற கீழ்த்தரமான சம்பவம் தமிழகத்தில் நடந்ததே இல்லை. இது கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு. தூய்மைப்பணியாளர்கள் போர்வையில் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.

கைதான அன்றே ஜாமின்

ஆனால், அரசு நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்தை அவையில் எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு, நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வந்ததோம். ஆனால் எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். ஆனால், அதனை தொடர்ந்து நிராகரித்தனர். அவை முன்னவர் இதனை பொருட்படுத்தவில்லை.

நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்தாலும், சாதாரண வழக்கை போட்டு, அன்றைய தினம் மாலையே அவர்கள் ஜாமினில் வெளியே வந்து விட்டனர்.

ஒருவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி, மனிதக் கழிவை வீசி அசுத்தம் செய்தவர்கள் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. இங்கு ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகாரம் நடக்கிறதா? மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே, இதை கண்டுகொள்ளவில்லை எனில், சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாக்கும் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பேச அனுமதிக்கவில்லை

இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், எங்களை பேச அனுமதித்திருப்பார்கள். ஆனால், அவர்கள் எடுக்கவில்லை. இதனால், எங்களை பேச அனுமதிக்கவில்லை. ஒரு அரசை மக்கள் எதுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள். மக்களை பாதுகாக்க வேண்டும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு. இரட்டை நிலைப்பாடு கொண்ட கட்சி தான் தி.மு.க., 2021 சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாள் சட்டசபை நடக்கும் என்று சொன்னார்கள். மொத்தமாகவே 119 நாட்கள் நடத்தியிருக்கிறார்கள். எந்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. சட்டசபையிலும் அவர்கள் பேச அனுமதிப்பதில்லை.

நீட் ரகசியம்

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மக்களிடம் தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ளது. நாட்டு மக்களிடம் சென்றால் கேள்வி கேட்பார்கள். அதனால் தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் என்று சொன்னீர்கள்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நீட் தேர்வு ரகசியம் இருப்பதாக கூறினார். எத்தனை நாட்கள் தான் மக்களை ஏமாற்றுவீங்க. நீட் தேர்வு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், ரத்து செய்ய முடியாது என்று ஏற்கனவே சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டார். அப்படியிருக்கையில் மீண்டும் இளைஞர்கள், மக்களை ஏமாற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடகத்தை கூட்டியுள்ளார்.

நீட் தேர்வால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் பேச்சை நம்பி தான் மாணவர்கள் இருக்கின்றனர். பொய்யை சொல்லி சொல்லி 4 ஆண்டுகளை ஓட்டி விட்டனர். வரும் சட்டசபை தேர்தலில் பொய் பேசி ஓட்டுக்களை பெற்ற தி.மு.க.,வுக்கு மரண அடி கொடுப்பார்கள். தி.மு.க.., அரசு அமைந்த பிறகு எந்த திட்டத்தையும் உருப்படியாக அறிவிக்கவில்லை. நன்மை கிடைக்கும் திட்டங்களும் இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்