வியர்க்குருவால் அவதியா?

5 பங்குனி 2025 புதன் 14:25 | பார்வைகள் : 180
நமது உடல் முழுவதும் வியர்வை சுரப்பிகள் ஏராளமாக இருக்கின்றன. உதடு, வெளிக்காது, நகத்தின் அடிப்பகுதி, பெண்கள் மற்றும் ஆண்களின் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் மட்டுமே வியர்வை சுரப்பிகள் இல்லை.
பொதுவாக ஒரு நாளைக்கு நம் உடலில் இருந்து சுமார் அரை லிட்டர் முதல் முக்கால் லிட்டர் வரை வியர்வை நீர் வெளியேறுகிறது. இதிலும், எவ்வளவு வெயில் அடித்தாலும் சிலர் தனக்கு வியர்க்கவில்லை என்பார்கள். மற்றவர்களுக்கு வெயில் காலத்தில் அதிகப்படியான வியர்வை உண்டாகும்.
மேலும், வெயில் காலம் வந்தாலே சிலருக்கு வியர்க்குரு பிரச்சனை கூடவே வந்துவிடும். உடல் முழுவதும் தோலின் மேற்புறத்தில் சிறியளவில் கொப்புளங்கள் போல் ஏற்படும். இதனால் ஏற்படும் அரிப்பை தாங்க முடியாது. மீறி சொரிந்தால் அது எரிச்சலையும் வலியையும் ஏற்படுத்தும்.
தட்பவெப்ப சீதோஷ்ண நிலை, வெயிலில் அதிக நேரம் இருப்பது, அதிக வியர்வை வரும் வேலைகளை செய்வது, இறுக்கமான ஆடைகளை அணிவது, காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் இருப்பது போன்றவை வியர்க்குரு பிரச்சனைக்கு முக்கிய காரணங்களாகும். பொதுவாக, கோடை காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனை பலருக்கும் ஏற்படும். வியர்க்குரு பிரச்சனையில் இருந்து தப்பிக்க பழங்கள் அதிகளவில் உண்ணலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வியர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் கிர்ணிப்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம்.அதேபோல், வியர்க்குருவுக்கு பனை நுங்கு மிக சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
மஞ்சள், வேப்பிலை, சந்தனம் ஆகிய மூன்றுமே வியர்க்குருவுக்கு சிறந்த கிருமி நாசினியாக செயல்படும். இதை சம அளவில் எடுத்து அரைத்து, வியர்க்குரு இருக்கும் இடங்களில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவலாம். ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு குளிக்கவும். அதேபோல், வழக்கமாக குடிப்பதைவிட, வெயில் காலத்தில் சற்று அதிகமாக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை உடுத்துவது சிறப்பாக இருக்கும்.வியர்க்குரு ஏற்பட்ட இடத்தில் கற்றாழை சாறு தடவுவதால் நல்ல பலன் கிடைக்கும்.வியர்க்குரு இருக்கும் இடங்களின் மேல் ஐஸ் கட்டிகளை வைப்பதால் எரிச்சல், அரிப்பு குறையும்.