Paristamil Navigation Paristamil advert login

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் நடிகர் அபிநய் !

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும்  நடிகர் அபிநய்  !

6 பங்குனி 2025 வியாழன் 13:48 | பார்வைகள் : 185


’துள்ளுவதோ இளமை’ என்ற படம் தனுஷ் அறிமுகமான படமாக மட்டுமல்ல, அதே படத்தில் அபிநய் என்ற நடிகரும் அறிமுகமானார். தற்போது அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, உயிருக்கு போராடி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், அவருக்கு பொருளாதார உதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில், கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவான ’துள்ளுவதோ இளமை’ திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் தான் நடிகர் அபிநய் அறிமுகமானார். அதன் பிறகு, சில படங்களில் ஹீரோவாகவும், சில படங்களில் ஹீரோவின் நண்பராகவும் நடித்தார். ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து விட்டன.

இதனால், முதலில் மிகவும் வறுமையில் இருந்த அவருக்கு, அவரது அம்மாவின் மறைவு மிகுந்த அதிர்ச்சியாக அமைந்தது. அதனை அடுத்து, வறுமையில் வாடிய அவர், அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்ததாகவும், வீட்டில் உள்ள பொருட்களை விற்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்காக அவர் ஏற்கனவே 15 லட்சம் கடன் வாங்கி விட்டதாகவும், மேலும் 28 லட்சம் தேவைப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவருக்கு திரையுலகினர், நடிகர் சங்கம் உதவ வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

’துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷும், அபிநயும் ஒரே நேரத்தில் அறிமுகமான நிலையில், இன்று தனுஷ் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். இதனால், தனது சக நடிகருக்கு அவர் உதவி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்