தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகன் நிறுவனங்களிலும் டாஸ்மாக்கில் ரெய்டு

7 பங்குனி 2025 வெள்ளி 03:29 | பார்வைகள் : 1492
மதுபான கொள்முதல் விவகாரத்தில், சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், அவரது நண்பர் ஜெயமுருகன் நிறுவனங்கள் மற்றும் 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,830 சில்லரை கடைகள் வாயிலாக, தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்களை விற்பனை செய்கிறது. டாஸ்மாக் தலைமை அலுவலகம், சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகையின் நான்காவது மாடியில் உள்ளது.
மிகப்பெரிய ஊழல்
ஐந்தாவது மாடியில், டாஸ்மாக் சில்லரை விற்பனை பொது மேலாளர் அலுவலகம் செயல்படுகிறது. மாநிலம் முழுதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது வகைகளை கொள்முதல் செய்வதில், மிகப்பெரிய ஊழல் நடப்பதாக புகார் எழுந்து உள்ளது.
மது ஆலைகளின் கொள்முதல் விலைக்கும், கடைகளில் விற்பனை செய்யப்படுவதற்கும், மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசம் உள்ளது.
இந்த விவகாரத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள், மதுபான ஆலை அதிபர்கள், டாஸ்மாக் அதிகாரிகளுக்குள் நடக்கும் 'டீலிங்' விவகாரத்தில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
அதன் அடிப்படையில், மதுபானத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும், தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மது தயாரிப்பு நிறுவனம், அவரது நெருங்கிய நண்பர் ஜெயமுருகனுக்கு சொந்தமான மது தயாரிப்பு நிறுவனம் மற்றும் சென்னையில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சோதனை
சென்னை பாண்டிபஜார், திலக் தெருவில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபானங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான, 'அக்கார்ட் டிஸ்லரிஸ் அண்டு பிரிவேர்ஸ்' என்ற நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுகிறது. அங்கு நேற்று பகல் 11:40 மணிக்கு, 'இனோவா' காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உதவியுடன் சோதனை நடத்தினர்.
அதேபோல, சென்னை தி.நகர், வெங்கட்நாராயணா சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில், மதுபான நிறுவனமான, 'கால்ஸ்' குழுமத்தின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது.
தி.மு.க., முக்கிய புள்ளி ஒருவருக்கு வேண்டிய நபர் என்று கூறப்படும் வாசுதேவன் உள்ளிட்டோர், இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
கால்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகத்தில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்புடன், அமலாக்கத் துறை அதிகாரிகள்சோதனை நடத்தினர்.
ஜெகத்ரட்சகனின் நெருங்கிய நண்பரும், டாஸ்மாக் கடைகளுக்கு பெரிய அளவில் மது வகைகளை சப்ளை செய்பவருமான ஜெயமுருகனின், எஸ்.என்.ஜே., குழுமத்தின் தலைமை அலுவலகம், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ளது. அங்கேயும் நேற்று காலையில் இருந்து, பல மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை அம்பத்துார் எஸ்டேட் பகுதியில், தமிழ்நாடு வாணிப கழகத்தின், டாஸ்மாக் கிடங்கு உள்ளது. அங்கேயும் சோதனை நடைபெற்றது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடந்த சோதனை குறித்து, ஊழியர்கள் கூறியதாவது:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையை சேர்ந்த ஒரு உயரதிகாரி உட்பட மூன்று அதிகாரிகளும், இரண்டு துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்களும் வந்தனர். உயரதிகாரிகள் செல்லும் லிப்ட்டில் ஏறி, ஐந்தாவது மாடிக்கு செல்லுமாறு, ஊழியரிடம் தெரிவித்துள்ளனர்.
அதற்கு அவர், 'ஐந்தாவது மாடிக்கு செல்லும் வழி பூட்டி இருக்கும்; ஆய்வு கூட்டங்களின் போது உயரதிகாரிகள் வந்தால் தான் அந்த வழி திறக்கப்படும். லிப்ட்டும் நிறுத்தப்படும்' என, தெரிவித்துள்ளார். அதை ஏற்காத அதிகாரிகள், 'நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும்; ஐந்தாவது மாடிக்கு செல்ல வேண்டும்' என்று, ஹிந்தியில் கூறியுள்ளனர்.
இதை புரிந்து கொள்ள முடியாத ஊழியர், 'சார், நீங்கள் எந்த அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்; நான்காவது, ஐந்தாவது மாடியில் டாஸ்மாக் அலுவலகம் உள்ளது; லிப்ட்டில் இருந்து ஐந்தாவது மாடிக்கு செல்லும் வழி பூட்டி இருக்கும். என்னிடம் சாவி இல்லை. நான்காவது மாடிக்கு சென்று, அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்கிருந்து தான் ஐந்தாவது மாடிக்கு செல்ல வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த லிப்ட் ஊழியரையும் அழைத்துக் கொண்டு, வேறு லிப்ட்டில் ஏறி, ஐந்தாவது மாடிக்கு சென்றனர். டாஸ்மாக் அலுவலகத்திற்குள் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், பிரதான நுழைவாயில் தவிர, மற்ற கதவுகளை பூட்டினர். பிரதான வாசலில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்கு நின்றனர்.
ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், அந்த விபரத்தை டாஸ்மாக் பொது மேலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் தெரிவித்தனர். பின், அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரையும் ஆய்வு கூட்ட அறையில் அமர வைத்தனர். பின், அலுவலகத்தில் இருந்த கோப்புகளை அள்ளி வந்து, ஆய்வு செய்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதிய உணவு இடைவேளையின் போது, அலுவலக உதவியாளர்களை அனுப்பி, அதிகாரிகளுக்கு உணவு வாங்கி வர அனுமதித்தனர். அமலாக்கத்துறை ஆய்வால், டாஸ்மாக் அலுவலகம் மட்டுமின்றி, தாளமுத்து நடராசன் மாளிகை முழுதும் பரபரப்புடன் காணப்பட்டது.
***
மதுபான ஆலைகளிலும் சோதனை
* செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, கள்ளபிரான் புரம் பகுதியில், எஸ்.என்.ஜே., குழுமத்தின் மதுபான ஆலை செயல்படுகிறது. அங்கு நேற்று காலை 11:30 மணியில் இருந்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்
* புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டை அருகே கல்லாக்கோட்டை என்ற இடத்தில் செயல்படும், கால்ஸ் குழுமத்தின் மதுபான ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டது
* விழுப்புரம், எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று காலை 11.00 மணியில் இருந்து, இரவு 8:00 மணியை தாண்டியும் சோதனையில் ஈடுபட்டனர்
* கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையத்தில், 'சிவா டிஸ்டிலரீஸ்' என்ற மதுபான தொழிற்சாலை செயல்படுகிறது. அங்கு, கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொழிற்சாலை அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று மாலை 6:00 மணி வரை வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
எஸ்.டி.பி.ஐ., அலுவலகங்களில் அமலாக்கத் துறை 'ரெய்டு'
பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட, பி.எப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் அரசியல் பிரிவு தான், எஸ்.டி.பி.ஐ., கட்சி என்ற புகார் எழுந்தது.
இது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனம் மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், 2022ல் மத்திய உள்துறை அமைச்சகம், பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்தது. அதன் தலைவரான, கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக் உடன், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பெய்சி, 55, நெருங்கிய தொடர்பில் இருப்பதும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.
இது தொடர்பான வழக்கில், கடந்த 3ம் தேதி, டில்லி விமான நிலையத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் பெய்சி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் பெற்ற வாக்குமூலம் அடிப்படையில், டில்லி மேற்கு நிஜாமுதீன் பகுதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சியின் தலைமை அலுவலகம், கேரள மாநிலம் திருவனந்தபுரம், மலப்புரம், ஆந்திராவில் நந்தியால், கர்நாடக மாநிலம் பெங்களூரு, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா, உ.பி.,யில் லக்னோ, ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், தமிழகத்தில் சென்னை மண்ணடி, இப்ராஹிம் சாஹிப் தெரு உட்பட, 12க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சி அலுவலகங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னையில் நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்; அங்கேயே தொழுகையும் நடத்தினர்.