தொகுதி மறுவரையறை விவகாரம்: எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு

8 பங்குனி 2025 சனி 00:05 | பார்வைகள் : 162
தொகுதி மறுவரையறை குறித்து எதிர்க்கட்சி ஆளும் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் கூட்டத்திற்கு வரும் 22ம் தேதி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என எழு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் முதல்வர்கள் சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மேற்கண்ட ஏழு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தொகுதி மறுவரையறை நடக்குமா என்பதல்ல கேள்வி, ஆனால் அந்த மறுவரையறை எப்போது நடக்கும். அப்படி நடக்கும்போது, இந்திய நாட்டின் முன்னுரிமைத் திட்டங்களுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய மாநிலங்களின் செயலுக்கு மதிப்பளிக்கப்படுமா என்பதுதான் கேள்வி. நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல. தங்கள் தேசியக் கடமைகளை நிறைவேற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக இந்த தொகுதி மறுவரையறை அமைந்து அதன்மூலம், அம்மாநிலங்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதாக அமைந்துவிடும் என்பதற்காகத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
மக்கள்தொகை பெருக்கத்தைத் திறம்படக் கட்டுப்படுத்தியதற்காகவும், தேசிய வளர்ச்சி இலக்குகளை நிலைநிறுத்தியதற்காகவும் நம்மைப் போன்ற மாநிலங்களை தண்டிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை அமைந்துவிடக்கூடாது. இதுகுறித்து நம்முடைய கவலைகளை நிவர்த்திசெய்யும் வகையில் ஒன்றிய அரசு தெளிவையோ அல்லது உறுதிப்பாட்டையோ அளிக்கவில்லை. மத்திய அரசின் பிரதிநிதிகள் தெளிவற்ற முறையில் வெற்று வாய்ச்சொற்கள் மூலம் எந்த மாநிலமும் அதன் தொகுதிகளை இழக்காது என்று கூறுகின்றனர். இதுபோன்ற தெளிவற்ற உத்தரவாதங்களை நாம் ஏற்கமுடியுமா? நமது மாநிலங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் போது, நம்முடன் ஒளிவுமறைவற்ற வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டாமா? இந்தப் பிரச்னை தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது என்று நம்புகிறேன்.
பார்லிமென்டில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் அதற்கான தீர்வுகளை நாம் இணைந்து உருவாக்கவேண்டும் . அதற்காக ஒரு கூட்டு ஆலோசனை மற்றும் ஒருங்கிணைந்த விவாதங்கள் மூலம் மட்டுமே, நமது பங்கை உறுதியளிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செயல்முறையைப் செயல்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக, பின்வரும் இரண்டு கோரிக்கைகளை வைக்கிறேன்.
1) தெற்கில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா; கிழக்கில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா; வடக்கில் பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவில் (JAC) சேர தங்களின் முறையான ஒப்புதல்.
2) கூட்டு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் தங்கள் கட்சியிலிருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமித்தல்.
முதல் கட்டமாக, மார்ச் 22, 2025 அன்று சென்னையில் ஒரு தொடக்கக் கூட்டத்தை நடத்த முன்மொழிகிறேன். நமது கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தத் தருணத்தில் தங்களது ஒத்துழைப்பைக் கோருகிறேன். நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல் நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும். மார்ச் 22, 2025 அன்று சென்னையில் தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறினார்.