642 பேர் படுகொலை செய்யப்பட்ட கொடூரம்! - வரலாற்றில் இருந்து...!!
12 ஆனி 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 19327
ஒரு கிராமம் அது. 70 வருடங்களுக்கு முன்பு இருந்த கிராமம் இப்போதும் ஒரு இம்மி அளவும் மாறாமல் அப்படியே இருக்கிறது. அந்த இடத்தை நீங்கள் பார்க்க நேர்ந்தால், உங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவு வலியை இது தரும்! சம்பவம் இவ்வாறு தொடங்குகிறது...
1944 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தின் 10 ஆம் திகதி அது.. Haute-Vienne இல் உள்ள Oradour-sur-Glane எனும் குக் கிராமம். அங்கு வசித்த மக்களுக்கு அன்றை நாளின் அஸ்தமனத்தை காண கொடுத்து வைக்கவில்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் கோர பிடியில் மொத்த ஐரோப்பாவும் சிக்கியிருக்க, சர்வதிகாரி அடோப் ஹிட்லரின் நாசி படை, குறித்த இந்த கிராமத்துக்குள் நுழைந்தது.
'கொல்வதொன்றே குறி!' என மூர்க்கத்தனமாக இருந்த நாசி படையினருக்கு, அன்றைய விருந்து இந்த குக்கிராமத்தில் இருந்த பெண்களும் குழந்தைகளும் தான். மொத்தம் 642 பேர்! சுற்றி வளைத்த படை, ஈவு இரக்கம் இல்லாமல் அத்தனை பேரையும் கொன்று குவித்தது.
குழந்தைகளையும், பெண்களையும் தேவாலயம் ஒன்றுள் திணித்து, அடைத்து கதவை இழுத்து சாத்தியது நாசி படை. ஒரு நிமிடத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட ரவைகளை கக்கும் இயந்திர துப்பாக்கி இடைவிடாது முழங்கியது. அத்தனை உயிர்களையும் காவு வாங்கியது அந்த அரக்கர்கள் படை!!
அந்த குக் கிராமம் முழுவதும் இரத்த வெள்ளத்தில் மிதந்தது. இந்த மனித வேட்டையை தீபாவளி போன்று கொண்டாடிவிட்டு, சிதைந்த கிராமத்தை விட்டு அன்று மாலையே வெளியேறியது..
சிலமணி நேரங்களில் 642 பேர் கொல்லப்பட்டதும் மொத்த உலகமும் பதை பதைத்தது. கட்டிடங்கள் சிதைந்தும்.. பொருட்கள் போட்ட போட்ட இடத்தில் கிடக்கவும், கட்டிடங்களில் இரத்த கறை படியவும்.. நாசிபடை நடத்தியிருந்த தாண்டவத்தில், கந்தல் துணி போன்று ஆகியிருந்தது மொத்த கிராமமும்.
ஜனாதிபதி சாள்-து-கோல் 'இந்த கிராமம் இப்படியே இருக்க வேண்டும்!' என ஒரு கட்டளையை பிறப்பித்தார். அவர் கட்டளையே சாசனம். இன்றுவரை அந்த சிதைந்த கிராமம் அப்படியே தான் உள்ளது. வலிகளும்....!!