Paristamil Navigation Paristamil advert login

வானொலியை கடத்தியவர்!!

வானொலியை கடத்தியவர்!!

11 ஆனி 2017 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18734


நேற்றைய பிரெஞ்சு புதினத்தில்,  FIP வானொலி குறித்து தெரிவித்திருந்தோம். குறித்த இந்த வானொலியை பிரித்தானியாவில் சட்டவிரோதமாக மீள் ஒலிபரப்பு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று மிக பிரபலம். பார்க்கலாம்...!!
 
திருட்டு வாகனங்களை சட்டவிரோதமாக நாடு கடத்துவது போல், FIP வானொலியை நாடுவிட்டு நாடு கடத்தியுள்ளார். பிரித்தானியாவின்  Brighton நகரவாசி ஒருவர் இந்த அப்பகுதி மக்களுக்கு 91.0 மற்றும் 98.5 MHz போன்ற இரு அலைவரிசையில் இந்த வானொலியை ஒலிபரப்பியுள்ளார். கேளுங்கள்... சொந்த காசு போட்டு FM Band இல் இரண்டு அலைவரிசையில் இரண்டு நகரங்களுக்கு ஒலிபரப்பியுள்ளார்... கிட்டத்தட்ட 10 வருடங்களாக...!! ஒன்று Bohemian, மற்றைய நகரம் Brighton. 
 
உண்மையில், மேற்குறித்த இரு அலைவரிசைகளில் FIP, பிரான்சின் Lille மற்றும் Metz ஆகிய நகரங்களில் ஒலிபரப்பை (தனி தனி நிலையங்கள்) செய்தது. அந்த ஒலிபரப்பை 'கடத்தி' அதே அலைவரிசையுடன், பிரித்தானியாவில் இரு நகரங்களுக்கு 'லைவ்-ஸ்ட்ரீம்' செய்துள்ளார் ஒரு நபர். 'நம்முடைய நெட்வொர்க் என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?' என FIP வானொலிகாரர்களே குழம்பிப்போகும் அளவுக்கு Brighton நகரில் துல்லியமாக பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கிறது FIP வானொலி. 
 
இதென்ன பிரம்மாதம், இந்த 'திருட்டு' வானொலி மிக துல்லியமான தெளிவில் ஒலித்ததோடு, RDS தகவல்களையும் வெளியிட்டது. ( RDS என்றால் Radio Data System, வானொலியின் பெயர், நிகழ்ச்சியின் பெயர் போன்றவற்றை வானொலி கேட்பவர்கள் திரை மூலம் அறிந்துகொள்ளலாம்.) இதன் RDS தகவல்களில் F_I_P என பெயர் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 
 
பின்னர் நடந்தது தான் சுவாரஷ்யமான சம்பவம். இந்த கடத்தல் விஷயத்தை கேள்விப்பட்டு, அவசர அவசரமாக FIP வானொலி நடவடிக்கை எடுத்தது. Brighton மற்றும் Bohemian ஆகிய இரு நகரங்களில் இயங்கிய 'ஈயடிச்சான்' வானொலியை தடை செய்தார்கள். ஆனால், 'யாரை கேட்டு வானொலி சேவையை நிறுத்தினீர்கள்?' என FIP வானொலி மீது படையெடுத்துள்ளார்கள் இரு நகர மக்களும். 'இல்லை, அது நாங்கள் ஒலிபரப்பவில்லை!' என FIP மன்றாடி கேட்டும்... 'யார் இயக்கினால் என்ன.. எங்களுக்கு வானொலி கேட்கவேண்டும்!' என எண்ணற்ற கடிதங்கள் FIP வானொலி நோக்கி பறந்தன. 
 
தொலைபேசி விசாரிப்புக்கள், கடிதங்கள், மின்னஞ்சல்கள், உள்ளூர் செய்தித்தாள்களில் கூட இந்த 'வானொலியை ஏன் தடை செய்தீர்கள்?' என சரமாரியாக எதிர்வினைகள் பறந்தன. ரேடியோ பெட்டியை போட்டு உடைத்தவர்களும் உண்டாம். சரி.. FIP வானொலியை இரு நகரங்களுக்கும் விஸ்தரிக்கலாம் என்றால்.. வானொலியின் உரிமம் பிரான்சுக்குள் மாத்திரம் தான் உண்டு. தவிர மேற்கண்ட அலைவரிசையில் பிரித்தானியாவில் வேறு வானொலிகள் இருந்தன. அதனால் அந்த எண்ணத்தை கைவிட்டது FIP. 
 
இந்த கையறு நிலமையை சமாளிக்க, வானொலியை கடத்திய நபரை 'குற்றவாளி இல்லை' என அறிவித்து, வழக்கை திருப்ப பெற்றுக்கொண்டது FIP. !!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்