Paristamil Navigation Paristamil advert login

FIP வானொலி சேவை! - ஒரு சுருக்கமான வரலாறு!!

FIP வானொலி சேவை! - ஒரு சுருக்கமான வரலாறு!!

10 ஆனி 2017 சனி 11:30 | பார்வைகள் : 18733


பிரான்சில் எண்ணற்ற வானொலி சேவைகள் உள்ளன. தனியே பாடல்களுக்கு என, 24 மணி நேர செய்தி சேவைகளுக்கு என.. பிரெஞ்சு மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்துகொண்டே உள்ளது பிரெஞ்சு வானொலிகள். இன்றைய பிரெஞ்சு புதினத்தில்.. FIP வானொலி சேவை குறித்து சில தகவல்களை பார்க்கலாம்..!!
 
France Inter வானொலியில் வார இறுதியில் நிகழ்ச்சிகள் செய்யும் இரு அறிவிப்பாளர்களான Jean Garetto மற்றும் Pierre Codou க்கும் ஒரு தடவை, 'தனியே பாடல்கள் மாத்திரம் ஒலிபரப்புவதற்கு ஒரு வானொலி இருந்தால் எப்படி இருக்கும்?' என்ற எண்ணம் 1970 இல் தோன்றியது. 
 
வானொலி ஆரம்பித்தது, 1971 இல். பிரான்சின் மிக பிரபலமான மற்றுமொரு வானொலியான France Inter வானொலியின் ஒரு சகோதர வானொலி தான் இந்த FIP. France Inter Paris என்பதை சுருக்கி FIP என வைத்துக்கொண்டுள்ளார்கள். ஆரம்பத்தில் வீதி நெருக்கடிகள், மணிச்செய்திகள் அறிவிப்பதோடு  முழுநேரமாக பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது. 
 
ஜனவரி, 4 ஆம் திகதி, 1971 ஆம் ஆண்டு முதன் முறையாக தனது சேவையினை ஆரம்பித்த இந்த வானொலி, Jazz,  World,  Chanson,  Rock,  Classical போன்ற இசை வடிவங்களில் பாடல்கள் ஒலிபரப்பியது. விளம்பரங்கள் இல்லாமல், 24 மணிநேர பாடல்கள் ஒலிபரப்பாக இயங்கிய வானொலி, பின்னர், காலை 7 மணியில் இருந்து இரவு 11 மணிவரை நிகழ்ச்சிகளும், அதன் பின்னர், தெரிவு செய்யப்பட்ட (Playlist) பாடல்களும் ஒலிபரப்பாகிறது. 
 
மிக குறிப்பாக இந்த வானொலியின் 'ஸ்லோகன்' (நிலைய குறியீட்டு வார்த்தை) கள் மிக சுவாரஷ்யம். வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு ஸ்லோகன்கள் ஒலித்தது. 1973 ஆம் ஆண்டில்  "La radio de toutes les musiques" ( அத்தனை பாடல்களுக்குமான வானொலி) எனவும், 1995 இல்  "Respirez, vous êtes sur FIP" (சுவாசியுங்கள். நீங்கள் இணைந்திருப்பது FIP)  எனவும், 2006 இல் "105.1% musique" (105.1 வீதம் பாடல்கள்) எனவும் ஸ்லோகன்கள் ஒலித்தது. அதென்ன 105.1 வீதம் பாடல்கள்? பரிசின் FIP வானொலியின் அலைவரிசை 105.1. இதே வானொலி மார்செய் நகரில் 90.9 அலைவரிசையில் ஒலிக்கிறது. 
 
அட.. இது எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்... ஒரு நபர், இந்த வானொலியை பிரித்தானியாவில் சட்டவிரோதமாக மீள்-ஒலிபரப்பு செய்துள்ளார். அந்த சுவாரஷ்ய கதை - நாளை!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்