பொறுப்புக்கூறல் விடயத்தில் இதயசுத்தியான செயற்பாடு அவசியம்

10 பங்குனி 2025 திங்கள் 09:00 | பார்வைகள் : 123
இலங்கையில் புதிதாக ஸ்தாபிக்கப்படக் கூடிய எந்தவொரு செயல்திறன் மிக்க நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையும் பாதிக்கப்பட்ட தரப்பினரது ஆதரவைப் பெற்றதாகவும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாகவும் அமைய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 58ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆணையாளர் வோல்க்கர் டர்க், இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையினை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையினை அவரது சார்பில் பேரவையின் தலைவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இதில், இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் இதுவே சரியான தருணமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனைவிட, அரசாங்கத்தால் பிரேரிக்கப்பட்டுள்ள உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயல்முறையை வரவேற்பதாகவும் ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையை அடுத்து பிரிட்டன் தலைமையிலான இணைத் தலைமை நாடுகளின் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதன்போதே புதிய நல்லிணக்க பொறுப்புக்கூறல் செயல்முறை பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றதாக அமைய வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஐ.நா. மனிதஉரிமை ஆணையகத்துக்கான பிரிட்டனின் பிரதிநிதி,
“நல்லிணக்க செயல்முறையில் முன்னேற்றத்தை அடைந்துகொள்வதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டையும் அதனை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், வீதி மறியல்களை நீக்குதல், வடக்கு – கிழக்கு வாழ் மக்கள் அவர்களின் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு இடமளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நாம் பாராட்டுகின்றோம்.
மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் அதனை தக்க வைத்துக் கொள்வதற்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு எதிரான கண்காணிப்புக்கள் மற்றும் ஒடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவருவதுடன் சிவில் சமூக இடைவெளியை பாதுகாத்து உறுதிப்படுத்துவது அவசியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு நிலைமாறுகால நீதிப் பொறிமுறையும் சுயாதீனமானதாகவும் சகல தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும் அர்த்தமுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யக் கூடியதாகவும் அமைவதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட நாம் தயாராக இருக்கிறோம் என்றும் பிரிட்டன் பிரதிநிதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் இன்னமும் பொறுப்புக்கூறல் விடயத்தில் நிலையான தீர்வு கிடைக்கப் பெறவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விரக்தியடைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் 2012ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கைக்கு எதிராக எட்டுக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உள்ளகப் பொறிமுறையின் கீழ் உரிய விசாரணை நடத்தி நீதியை வழங்குமாறு ஆரம்பத்தில் கோரப்பட்டது.
பின்னர் கலப்புப் பொறிமுறையின் கீழ் நீதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரப்பட்டது. ஆனால், எத்தகைய பிரேரணைகள் ஐ.நா. மனிதஉரிமைப் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட போதிலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூறல் செயல்பாட்டை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.
2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அன்றைய நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கி கலப்பு பொறிமுறையின் கீழ் விசாரணையினை நடத்துமாறு இந்தப் பிரேரணை கோரியிருந்தது. இதற்கு நல்லாட்சி அரசாங்கம் அன்று இணை அனுசரணை வழங்கியிருந்தபோதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வரவில்லை.
ஆனாலும், இந்தப் பிரேணையில் உள்ளடங்கியிருந்த காணாமல் போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பவற்றை அமைப்பதற்கு நல்லாட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
காணாமல் போனோருக்கான ஆணைக்குழு அமைக்கப்பட்ட போதிலும் அந்த ஆணைக்குழு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. காணாமல்போனோருக்கான ஆணைக்குழு பல்வேறு விசாரணைகளை நடத்தியிருந்தது. ஆனால், அந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கப் போவதாக நல்லாட்சி அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஆனால், அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
2022ஆம் ஆண்டு மக்கள் எழுச்சிப் போராட்டங்களையடுத்து ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றிருந்தார். அவரது அரசாங்க காலத்தில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆணைக்குழுவுக்கென இடைக்கால செயலகம் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றார். அதன் பின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கப்பட்டது. புதிய அரசாங்கமானது பொறுப்புக்கூறல் செயல்பாட்டில் முன்னைய அரசாங்கங்களின் கொள்கையை கடைப்பிடிக்கும் வகையிலேயே செயற்பட்டிருந்தது.
கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில், 2022ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மேலும் ஒரு வருட காலம் நீடிப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்தத் தீர்மானத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதேபோன்றே பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றகரமான நடவடிக்கையாக அமைந்திருந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் செயற்பாட்டையும் அதன் இடைக்கால செயலகத்தின் நடவடிக்கைகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடைநிறுத்தியது. அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் தடை செய்திருந்தது.
பொறுப்புக்கூறும் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மாற்று நிலைப்பாட்டை கொண்டுள்ளமை இதன்மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
ஆனாலும், ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையின் தற்போதைய 58 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், பொறுப்புக்கூறல் விடயத்தில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கப்படும் எனவும் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இந்த வாக்குறுதியையே ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையின் ஆணையாளர் வோல்க்கர் டர்க் பாராட்டியிருக்கின்றார்.
இந்த முயற்சியானது பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்ற வகையில் அமைய வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகளும் தற்போது வலியுறுத்தியிருக்கின்றன.
உண்மையிலேயே கொடூர யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரிழப்புக்களை சந்தித்திருக்கின்றனர். அந்த மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அதற்கான உரிய பொறிமுறை நிறுவப்பட வேண்டும். ஆனால், மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் காலத்தை வீணடிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டனவே தவிர, இதயசுத்தியுடன் இந்த விடயத்தில் செயற்பட்டிருக்கவில்லை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து சுயாதீனமாக செயற்படுத்துவதற்கு தயார் என்று அறிவித்திருக்கின்றது. அதற்கு ஐ.நா. மனிதஉரிமை ஆணைக்குழுவும் ஆதரவு தெரிவித்திருக்கின்றது.
எனவே, இனியாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பொறுப்புக்கூறும் செயல்பாட்டில் இதயசுத்தியுடன் ஈடுபட வேண்டும். வெறுமனே ஐ.நா. மனித உரிமைப் பேரவையை ஏமாற்றி காலத்தை இழுத்தடிப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபடக் கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
நன்றி virakesari