எந்த உறுதியும் அளிக்கவில்லை: டிரம்ப் பேட்டி குறித்து இந்தியா விளக்கம்

11 பங்குனி 2025 செவ்வாய் 13:08 | பார்வைகள் : 221
அமெரிக்க பொருட்களுக்கு வரிக் குறைப்பு தொடர்பாக இந்தியா எந்த உறுதியையும் அளிக்கவில்லை என வர்த்தகத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும் போது, ' இந்தியாவில் அதிகளவு வரி உள்ளது. அங்கு எதையும் விற்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. அதனை அம்பலப்படுத்திய பிறகு, வரியை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது,' எனக்கூறியிருந்தார்.
இதற்கு இந்தியாவில் விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.
இந்நிலையில் பார்லிமென்ட் குழு முன்பு வர்த்தகத்துறை செயலாளர் சுனில் பர்திவால் கூறியதாவது: இரு நாடுகளுக்கு இடையே இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருப்பதால், டிரம்ப் பேச்சு மற்றும் மீடியா அறிக்கைகளின் அடிப்படையில் யாரும் முடிவெடுக்கக் கூடாது.
இருவரும் பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் போடுவதற்கான பணிகளில் இந்தியாவும், அமெரிக்காவும் ஈடுபட்டு உள்ளன.வெறும் வரிகளை குறைத்து கொள்வதற்கு மட்டுமல்லாமல், நீண்ட கால வர்த்தகத்தில் ஒத்துழைப்பை ஈட்டும் வகையில் பணிகள் நடக்கின்றன. அமெரிக்க பொருட்களுக்கான வரிக்குறைப்பு தொடர்பாக இந்தியா எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை.
தடையற்ற வர்த்தகத்திற்கு இந்தியா ஆதரவாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை அதிகரிக்க உதவும் வகையில் வர்த்தகத்தை தாராளமயமாக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.