அருங்காட்சியகத்தில் கொள்ளையிட்ட சிலந்தி மனிதன்!! - வரலாற்றில் இருந்து...
4 ஆனி 2017 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18744
பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டாலும்... கண்காணிப்பு கமராக்கள் நாள் முழுவதும் கண்காணித்தாலும்... கண்ணில் எண்ணையை ஊற்றி விழித்திருந்தாலும்... கொள்ளைச் சம்பவங்கள் பல நூதன முறையில் இடம்பெற்றுக்கொண்டு தான் உள்ளன... இதோ... இந்த 'ஸ்பைடர் மேன்' கொள்ளை போல்!!
சம்பவம் இடம்பெற்றது 2010 ஆம் ஆண்டு மே மாதத்தில்!! பரிசின் Modern Art Museum. நீல நிறத்தில் உடம்பு முழுவதும் மூடப்பட்ட உடை.. சிவப்பு நிறத்தில் கால் சட்டை.. அச்சு அசல் 'ஸ்பைடர் மேன்' தான். இந்த வேடத்தில் மேற்குறிப்பிட்ட ஓவிய அருங்காட்சியக கூடத்தில் இருந்து 5 ஓவியங்களை திருடிக்கொண்டு பறந்துவிட்டான்.
கொள்ளையனின் பெயர் Vjeran Tomic. வயது 49. திருடப்பட்ட ஓவியங்களில் Henri Matisse, Pablo Picasso போன்ற 'பெருந்தலைகளின்' ஓவியங்களும் உள்ளடங்கலாக.. மொத்த மதிப்பு 100 மில்லியன் யூரோக்கள்!!
அன்று என்ன போதாத காலமோ.. அவசர எச்சரிக்கை மணிகள் ஒலி எழுப்பவில்லை... கதவில் 'பூட்டை' உடைத்த கொள்ளையன்.. நேரே உள்ளே வந்து, அருங்காட்சியகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள் நுழைந்து சாவகாசமாக திருடிக்கொண்டு புகையாக மறைந்துவிட்டான்.
மூன்று காவலாளிகள் வேறு அன்று பணியில் இருந்துள்ளனர். பின்னர் என்ன.. திருடனைத் தேடும் பணி ஒரு பக்கம் என்றால்.. கோட்டை விட்டது எப்படி என்ற ஆராய்ச்சி மறுபக்கம்...!!
பின்னர் அடுத்த வருடம், 2011 இல் கொள்ளையன் கண்டுபிடிக்கப்பட்டு... 20 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கொள்ளையன் திருடிய ஓவியங்களின் மொத்த மதிப்பு 107 மில்லியன் அமெரிக்க டொலர்கள். அதில் ஒரு ஓவியம் மாத்திரம் தனியே 28 மில்லியன்கள் மதிப்புள்ளது.. அந்த ஓவியம் குறித்து நாளை பார்க்கலாம்..!!