பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்; போக்குவரத்து ஆணையம் பரிந்துரை

12 பங்குனி 2025 புதன் 04:10 | பார்வைகள் : 510
கார் வாங்குவோர், பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்று இணைப்பதை கட்டாயமாக்கும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
பொருளாதார வசதி இருப்பவர்கள் தாங்கள் பயணிக்க கார் வாங்குவது அதிகரித்துள்ளது. வீட்டுக்கு ஒரு கார் இருந்த காலம் மாறி, இப்போது வீட்டுக்கு மூன்று, நான்கு, ஐந்து என கார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சென்னையில் 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 92 லட்சம் கார்கள் உள்ளன.
ஆனால் இவற்றை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி இல்லை. குறைந்தபட்சம் 30 லட்சம் கார்களை நிறுத்த பார்க்கிங் வசதி தேவைப்படுகிறது. ஆனால், பொது இடங்களில் 14000 கார் நிறுத்த மட்டுமே இட வசதி மட்டுமே உள்ளது. மற்ற அனைவரும் கார்களை சாலையில் நிறுத்துகின்றனர்.
இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறும் ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காண, கார் வாங்கினால், பார்க்கிங் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும், என சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதனை மாநில வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் ஒரு வாகனத்தை பதிவு செய்வதற்கு வாங்குபவர் பார்க்கிங் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வீட்டில் ஒரே ஒரு கார் பார்க்கிங் இடம் மட்டுமே இருக்கும்.
ஆனால் மூன்று கார்கள் வைத்திருப்பார்கள். இரண்டு கார்கள் சாலையில் நிறுத்தப்படும். இது சுற்றுப்புறத்தின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். பார்க்கிங் சான்று என்பது கார் வாங்குவதை கட்டுப்படுத்தவும் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கவும் வழி வகுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.