133 ட்ரோன்கள் தாக்குதல்…! உக்ரைனில் சிரியர்கள் மரணம்

12 பங்குனி 2025 புதன் 15:12 | பார்வைகள் : 212
உக்ரைனின் தெற்கு துறைமுக நகரில் ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியாகினர்.
உக்ரைன், ரஷ்யா போர் நிறுத்தத்தை கொண்டுவர சவுதி அரேபியாவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.
நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா உடனான போரை, 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதித்தது.
இதனைத் தொடர்ந்து, தற்காலிக போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு உக்ரைன் துறைமுக நகரமான ஒடேசாவில் பாலிஸ்டிக் ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், அல்ஜீரியாவுக்கு தானியங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் மறுசீரமைப்புக்கான துணைத் தலைவர் Oleksiy Kuleba கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்கள் சிரிய மக்கள். அவர்களில் ஒருவர் 18, மற்றொவர் 24 வயதுடையவர் ஆவர்.
மேலும் இருவர் காயமடைந்தனர். ஒரு உக்ரேனியரும், ஒரு சிரியரும் அடங்குவர். உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியமான துறைமுகங்கள் உட்பட உக்ரைனின் உள்கட்டமைப்பை ரஷ்யா தாக்குகிறது" என தெரிவித்தார்.
அதேபோல், உக்ரைனின் வான் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில், "ரஷ்யா ஒரே இரவில் மொத்தம் 3 ஏவுகணைகள் மற்றும் பல்வேறு வகையான 133 ட்ரோன்களை ஏவியது. அவற்றில் 98 ட்ரோன்களை எங்கள் படைகள் சுட்டு வீழ்த்தின" என தெரிவித்துள்ளது.