Paristamil Navigation Paristamil advert login

உயிரே போனாலும் பா.ஜ.,விற்கு அடிபணிய மாட்டோம் : ஸ்டாலின் ஆவேசம்

உயிரே போனாலும் பா.ஜ.,விற்கு அடிபணிய மாட்டோம் : ஸ்டாலின் ஆவேசம்

13 பங்குனி 2025 வியாழன் 06:24 | பார்வைகள் : 162


உரிமைகள் பறி போவதையும், தமிழகத்தை கொச்சைப்படுத்துவதையும் பார்த்து, பதவி சுகத்துக்காக, மத்திய அரசிடம் அடங்கிப் போக மாட்டோம். தி.மு.க.,வின் போராட்டத்தை பார்க்க வேண்டிய நிலையை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது. பா.ஜ.,வின் பாசிச நடவடிக்கைகளுக்கு, உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆவேசமாக பேசினார்.

தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற தலைப்பில் மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம், நேற்று திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

நம் இனத்தின், நிலத்தின், மொழியின் நலத்தை கெடுக்கும் எதிரிகள் யாராக இருந்தாலும், துணிவுடன் எதிர்கொள்வோம். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது

 இடையூறு

ஒரு மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு, நாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றால், அதற்கு துணை நிற்க வேண்டியது, மத்திய அரசின் கடமை. ஆனால், மத்திய பா.ஜ., அரசு இடையூறு தருகிறது.

எந்த வகையில் தடை கற்களை போட முடியுமோ, நிம்மதியை கெடுக்க முடியுமோ, அதை எல்லாம் செய்கின்றனர்; நம்மை சிறுமைப்படுத்துகின்றனர்.

உரிமைகள் பறிபோவதையும், தமிழகத்தை கொச்சைப்படுத்துவதையும் பார்த்து, பதவி சுகத்துக்காக, மத்திய அரசிடம் அடங்கிப் போக மாட்டோம். தி.மு.க.,வின் போராட்டத்தை பார்க்க வேண்டிய நிலையை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி, பிரதமர் வேட்டபாளராக அறிவிக்கப்பட்டபோது, 'டில்லியில் இருந்து இந்தியா முழுமைக்கும் திட்டமிடுவது அகற்றப்படும்; அந்தந்த பகுதிகளில் இருப்பவர்கள் துணையுடன் திட்டமிடுவது, என்னுடைய அணுகுமுறையாக இருக்கும்' என்றார்.

சொன்னபடி அவர் நடக்கவில்லை; எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் அரசியலை மட்டும்தான் அவர் செய்கிறார்.

உறுதி

கூட்டாட்சி தத்துவத்தை ஆதரிப்பதாக கூறிய மோடி, அதற்கு ஒரு சாட்சியாவது காட்ட முடியுமா? பிரச்னைகள் வரும்போது, மாநில முதல்வர்களை அழைத்து, என்றைக்காவது பேசியது உண்டா... எதுவும் இல்லை!

'மாற்று கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களை, பழி வாங்க மாட்டேன்' என உறுதி அளித்தீர்கள்... 'அரசியல் வேறுபாடு இருந்தாலும், மத்திய, மாநில அரசுகள் சீர்குலைய இடம் தர மாட்டேன்' என்றீர்கள்... ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் அரசியலை மட்டும் நடத்தி கொண்டிருக்கிறீர்கள்... இதற்கு எத்தனையோ ஆதாரங்களை

கூற முடியும்!

தமிழக ஆசிரியர்கள் - மாணவர்களுக்கு, 2,151 கோடி ரூபாய் கொடுக்காமல், பழிவாங்கும் அரசியலை மத்திய அரசு செய்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, 42 லட்சம் பள்ளிகளுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கின்றனர்.

தேசிய கல்விக் கொள்கை, மாணவர்களை கல்விக்குள் கொண்டுவரும் திட்டமாக இருந்தால் வரவேற்போம். ஆனால், கல்வியில் இருந்து மாணவர்களை வெளியேற்றுவதற்கான, அத்தனை செயல் திட்டங்களையும் கொண்டதாக உள்ளது; அதனால் தான் எதிர்க்கிறோம்.

அது தேசிய கல்விக் கொள்கை அல்ல; காவிக் கொள்கை. இந்தியாவை வளர்க்க உருவாக்கப்பட்டது அல்ல; ஹிந்தியை வளர்க்க கொண்டு வரப்பட்டது. இது தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை அழித்து ஒழித்துவிடும். அதனால் எதிர்க்கிறோம்.

மூன்று, ஐந்து, வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்து வடிகட்ட பார்க்கிறது. ஒன்பது முதல் பிளஸ் 2 வரை, செமஸ்டர் தேர்வு முறை கொண்டு வரப் போகின்றனர். அதனால், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடத்தில் சேர முடியாது; மேலும், 10ம் வகுப்பு முதல் படிப்பை தொடர விரும்பாத மாணவர்கள் வெளியேறலாம் என்கின்றனர்.

ஆறாம் வகுப்பு முதல் தொழில்கல்வி என்ற பெயரில், குலக் கல்வி முறையை கொண்டுவர உள்ளனர். இதையெல்லாம் ஆய்வு செய்துதான், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்றேன். அந்த கோபத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தை சேர்ந்தவர்கள் மீது கோபப்படுகிறார். தமிழர்களுக்கு நாகரிகம் இல்லை என்கிறார்.

தமிழகம், விடாமல் போராடுவதை, தாங்கிக் கொள்ள முடியாமல், கொச்சைப்படுத்தி பேசுகிறார். எங்கள் மாநிலத்தில் வரி வசூல் செய்து, எங்களை பட்டினி போடுவது தான் நாகரிகமா? 'ஹிந்தியை ஏற்காவிட்டால் நிதி தர மாட்டோம்' என்று சொல்வதை விட அராஜகம் இருக்க முடியுமா?

தமிழர்களின் போர் குணத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான், தமிழகத்தின் எம்.பி.,க்கள் எண்ணிக்கையை குறைக்க சதி செய்கின்றனர். தொகுதி மறுவரையறை என்ற கத்தி, தென் மாநிலங்களின் தலைக்கு மேல் தொங்குகிறது. இதனால், தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும்.

இப்போதுள்ள 39 தொகுதிகளில், எட்டு தொகுதிகள் குறையும்; தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது எம்.பி.,க்கள் எண்ணிக்கையை பற்றிய கவலை இல்லை; மாநிலத்தின் உரிமை சார்ந்தது.

தென் மாநிலங்களில் வெற்றி பெற முடியாது என்பதால், வடமாநிலங்களில் பெறும் வெற்றியை வைத்து, ஆட்சியை தக்கவைக்க பா.ஜ., பார்க்கிறது. இதை, தென் மாநில அனைத்து கட்சிகளையும் சேர்த்து, தடுப்போம். பாதிக்கப்படும் மாநிலங்களை சேர்த்து, கூட்டு நடவடிக்கை குழு அமைக்க உள்ளோம். வரும் 22ம் தேதி, சென்னையில் பல்வேறு மாநில கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த உள்ளோம்.

'நிதி தரமாட்டோம்; அதிகாரத்தை பறிப்போம்; தொகுதி எண்ணிக்கை குறைப்போம்' என, எதேச்சாதிகார, பா.ஜ.,வின் பாசிச நடவடிக்கைககளுக்கு, உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்; ஒட்டுமொத்த இந்தியாவை திரட்டுவோம்!

இது இந்தியா முழுவதுக்குமான போராட்டமாக மாறப் போகிறது. பிரதமர் மோடி, ஹிந்தியை வளர்ப்பதை விட, இந்தியாவை வளர்க்க பார்க்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்