இன்று முதல் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்

13 பங்குனி 2025 வியாழன் 10:28 | பார்வைகள் : 885
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் 16 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, கள்ளக்குறிச்சி 15; கோமுகி அணை 12; ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி கலயநல்லுார் தலா 11; கள்ளக்குறிச்சி மாவட்டம், சூலாங்குறிச்சி 10; கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர், திருவாரூர், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் தலா, 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய, மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு முதல், தென்மேற்கு வங்கக்கடல் வரை, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மார்ச் 17 வரை இதே நிலை தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரம், காலையில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.