நிதிக்காக இணைந்த முதல்வர்-கவர்னர்; அமைச்சர் நிர்மலாவை சந்தித்து கோரிக்கை

13 பங்குனி 2025 வியாழன் 18:35 | பார்வைகள் : 114
டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்றுசந்தித்து பேசினார்.
அரிய நிகழ்வாக இந்த சந்திப்பின்போது, அந்த மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் உடனிருந்தார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்கு கவர்னராக இருந்த ஆரிப் முகமது கான் மற்றும் பினராயி விஜயன் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது.
குற்றச்சாட்டு
இந்நிலையில், புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர விஸ்வ நாத் அர்லேகர் கடந்த ஜனவரியில் பொறுப்பேற்றார். இதையடுத்து, கவர்னர் - முதல்வர் இடையே சுமுக போக்கு நிலவுவதாகக் கூறப்படுகிறது.
கேரளாவின் வயநாட்டில், கடந்த ஆண்டு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பாதிப்புக்கான நிவாரண நிதியை வழங்குவதில், மத்திய பா.ஜ., அரசு பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு நிலவியது.
இந்த சூழலில், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் உடன் டில்லி சென்ற பினராயி விஜயன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து பேசினார்.
கேரளா ஹவுசில் நடந்த இந்த சந்திப்பின் போது, கேரள அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி கே.வி.தாமஸ் உடனிருந்தார். முன்னதாக, மத்திய அமைச்சரை மூவரும் இணைந்து வரவேற்றனர்.
மொத்தம் 50 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, கேரளாவுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பரபரப்பு
இந்த சந்திப்பு குறித்த தகவலை புகைப்படத்துடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும், பா.ஜ.,வுக்கும் ரகசிய உறவு இருப்பதாக கேரள காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பினராயி விஜயன் - நிர்மலா சீதாராமன் இடையிலான திடீர் சந்திப்பு, மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.