தமிழக பட்ஜெட்டில் கல்விக்கு ரூ.55,261 கோடி

15 பங்குனி 2025 சனி 02:39 | பார்வைகள் : 227
தமிழக அரசு பட்ஜெட்டில் கல்விக்கு அதிகபட்சமாக, 55,261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தராமல் நிறுத்திவைத்த 2,152 கோடியையும், தமிழக அரசு சொந்த ஆதாரங்களில் வழங்குவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
சட்டசபையில், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி துறைக்கு 44,042 கோடி; உயர் கல்விக்கு 8,212 கோடி என, மொத்தம் 52,254 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்த ஆண்டில் பள்ளிக்கல்விக்கு 46,767 கோடி; உயர் கல்விக்கு 8,494 கோடி என, மொத்தம் 55,261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பத்து ஊர்களில் கலை அறிவியல் கல்லுாரிகள், 14 மலைப்பகுதி பள்ளிகளை மேல்நிலைப் பள்ளி களாக தரம் உயர்த்துதல், பல்கலை கழகங்கள் வளர்ச்சிக்கு, 200 கோடி ரூபாயில் சிறப்பு நிதியம், சேலம், கடலுார், திருநெல்வேலியில் பிரமாண்ட நுாலகம் உட்பட, பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மறுத்ததால், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்துக்கு மத்திய அரசு தராமல் நிறுத்தி வைத்த 2,152 கோடியை தமிழக அரசே சொந்த நிதியில் இருந்து செலவிடும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
இந்த கூடுதல் செலவால் நெருக்கடி ஏற்படும் என்றாலும், மாணவர்கள் நலன் கருதி அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதுகுறித்து, பட்ஜெட் உரையில் அமைச்சர் கூறியதாவது:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை, கடந்த ஏழு ஆண்டுகளாக, மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, மாணவர்களின் அடிப்படை கல்வி அறிவை உறுதி செய்யும் எண்ணும் எழுத்து திட்டம்; மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவை மிகுந்த பயனளிக்கும் திட்டங்கள். தொலைதுாரத்தில் இருந்து வருகின்ற மாணவர்களுக்கு போக்குவரத்து படி வழங்குவதும் இதில் அடங்கும்.
இதுதவிர ஆசிரியர்களின் ஊதியம், உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள், மாணவர்களின் தனித்திறன்கள் மிளிர கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி, கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டங்கள், தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அப்படி இருந்தும், மும்மொழி கல்வியை உள்ளடக்கிய தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ளாததால், ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய 2,152 கோடி ரூபாயை தமிழகத்துக்கு தராமல் மத்திய அரசு வஞ்சித்துள்ளது.
எனினும், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி துளியும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட திட்டங்களுக்குரிய நிதியை, மாநில அரசே தன் சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து வழங்குகிறது.
நெருக்கடியான சூழலிலும், 2,000 கோடி ரூபாய் நிதியை இழந்தாலும், இருமொழி கொள்கையை விட்டுத் தர மாட்டோம் என, முதல்வர் கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளார். அவர் பின்னால் தமிழக மக்கள் அனைவரும் அணிவகுத்துள்ளனர். இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.
எல்லார்க்கும் எல்லாம்
எல்லார்க்கும் எல்லாம் என்ற உயர்ந்த நோக்கத்துடன், தமிழகத்தின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைந்திருக்கிறது தமிழக பட்ஜெட். மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ் பெருமிதம், இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம், வேலைவாய்ப்புகளை அள்ளி தரும் தொழில் பூங்காக்கள், புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என, நவீன தமிழகத்தை உருவாக்கும் முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என, அனைவருக்குமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. எல்லார்க்கும் எல்லாம் என்ற உயர்ந்த நோக்கத்துடன், தமிழகத்தின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது, தமிழக பட்ஜெட்.- ஸ்டாலின், தமிழக முதல்வர்