ஜனநாயக அமைப்புகள் மீது சுப்ரீம் கோர்ட் 'ஏவுகணை தாக்குதல்!

18 சித்திரை 2025 வெள்ளி 14:12 | பார்வைகள் : 188
மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதா, இல்லையா என முடிவு எடுக்க ஜனாதிபதிக்கே கெடு விதிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு போடுவது, ஜனநாயக அமைப்புகள் மீது அணு ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பானது,'' என, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கொந்தளிக்கிறார். மசோதாக்கள் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், அரசுக்கும் நீதித்துறைக்குமான அதிகாரம் குறித்த புது பூதமாக கிளம்பியுள்ளது இந்த தாக்குதல்.
மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் இழுத்தடிக்கிறார்' என, கவர்னருக்கு எதிராக, தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க காலக்கெடு நிர்ணயித்தது.
இந்நிலையில், ராஜ்யசபா நடத்தும் பயிற்சி வகுப்பு துவக்க விழாவில், ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசியதாவது:
டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் எரிந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்து ஒரு வாரமாக யாருக்கும் தெரியாது. ஒரு பத்திரிகை, செய்தி வெளியிட்ட பிறகே தெரிந்தது.
ஆனால், இன்று வரை, எப்.ஐ.ஆர்., கூட தாக்கல் செய்யவில்லை. ஏனென்றால், கோர்ட் உத்தரவு இல்லாமல், நீதிபதி மேல் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய முடியாது.
சம்பந்தப்பட்ட நீதிபதியை வேறு கோர்ட்டுக்கு மாற்றினர். மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைத்தனர். அது பரிந்துரை வழங்கும்.
அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. இதுவே சராசரி மனிதர்கள் வீட்டில் நடந்திருந்தால், இப்படி விட்டிருப்பரா? சட்டம் பொதுவானது. நீதிபதிகளுக்கு என்று எந்த விலக்கும் கிடையாது. ஜனாதிபதிக்கும், கவர்னர்களுக்கும் மட்டுமே அரசியல் சாசனம் விலக்கு
அளிக்கிறது.
ஆனால், நீதிபதிகள், தங்களை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக கருதுகின்றனர். அவர்களே, புதிதாக சட்டம் இயற்றுகின்றனர். பார்லிமென்டின் அதிகாரத்தில் தலையிடுகின்றனர். தமிழக அரசின் மசோதாக்கள் தொடர்பான வழக்கில், கவர்னர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதோடு நில்லாமல், ஜனாதிபதிக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது, சுப்ரீம் கோர்ட். 3 மாதத்தில் மசோதா மீது முடிவு சொல்லாவிட்டால், அது சட்டமாகி விடுமாம். சட்டம் இயற்றுவது பார்லிமென்ட் செய்ய வேண்டிய வேலை. அதை நீதிபதிகள் செய்தால் என்ன அர்த்தம்? அது என்ன, சூப்பர் பார்லிமென்டா?
சுப்ரீம் கோர்ட்டுக்கு சில சிறப்பு அதிகாரங்களை அரசியல் சாசனத்தின் 142 வது பிரிவு வழங்கியுள்ளது. அதை ஓர் அணு ஏவுகணையாக பயன்படுத்தி, ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துகிறது. இது என்ன விசித்திரம்? என்ன நடக்கிறது இந்த நாட்டில்? ஜனாதிபதியின் முடிவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று சொல்ல கோர்ட்டுக்கு என்ன அதிகாரம்?
அரசு என்பது மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகிறது. அது பார்லிமென்டுக்கும், மக்களுக்கும் பதில் கூற கடமைப்பட்டது. அந்த பொறுப்புடைமையே நம்மை வழிநடத்துகிறது. பார்லிமென்டில் நீங்கள் கேள்வி எழுப்ப முடியும். ஆனால், பார்லிமென்ட் அதிகாரத்தை கோர்ட் எடுத்துக் கொண்டால், யாரை யார் கேள்வி கேட்பது?
இவ்வாறு தன்கர் பேசினார்.